Tuesday, June 28, 2005

மெயின் ·ப்ரேம கோயிஞ்சாமி

கடுப்பாகத் தான் இருக்கிறது, மூன்றாம் முறை இதையே எடுத்துப் போட. என்ன செய்வது, இப்போதுதான் கண்ணன் மூலம் பிரச்னை தலைப்பின் நீளத்தில் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அதனால், மீண்டும், ரிப்பீட்டேய்!
------------------
இடது கண்ணில் -3.5, வலது கண்ணில் -4.5 என்று தாராள மனதாக ஏராள எண்களை அந்தக் கண் மருத்துவர் உதிர்த்தபோது அப்பா வாங்கிக் கொடுத்த கோல்ட் ·ப்ரேம் கண்ணாடிதான் கோயிஞ்சாமியின் அடையாளமாகிப்போனது. அப்பா கூட்டிப்போய் சேர்த்துவிட்டதுதான் சுவாமி வாத்சல்யானந்த குருஜி அருளாசி பெற்ற ஐயாறுடையப்பன் இன்ஸ்டிடியூட் ஆ·ப் டெக்னாலஜி (சுருக்கமாக ஐ.ஐ.டியாம்).

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கீழ் வருகிற காலேஜ். மூளையெல்லாம் செலவு செய்து படிப்பது சரஸ்வதிக்கு செய்யும் அநீதி அல்லவா? அதனால், சமத்தாக மார்க்கெட்டு கெயிடு மட்டும் படித்து மார்க்கு வாங்கினான் கோயிஞ்சாமி. எட்டு செமஸ்டர் எக்கிப்பிடித்ததில் எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி ஆனான்.

ஐயாறுடையப்பன் வெறும் விபூதி மட்டுமே அருள் பாலித்திருந்த நிலையில் தெண்டச்சோற்று எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி என்று அவனது பெயர் மட்டும் நீண்டுகொண்டே போனது.

அப்பாதான் சொன்னார், "டேய்! ஏதாவது கம்பியூட்டர் கோர்ஸ் படிடா!".

கூடிய சீக்கிரமே அக்கரை ஒன்றும் பச்சையில்லை என்று கோயிஞ்சாமிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜாவா படித்தாலும் பூவாவுக்கே காரண்டி இல்லை என்பதும் யூனிக்ஸ் படித்துவிட்டு அவனவன் ஓனிக்ஸில் வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறான் என்பதும் பயமூட்டின.

அப்பாதான் சொன்னார், "ஏண்டா! அது என்னவோ மெயின் ·ப்ரேமுன்னு புதுசா வந்துருக்குதாமா? விசாரிச்சுப்பாரேண்டா!".

நாளிதழ்களைப் புரட்டியதில் 6X4 செ.மீ. அளவில் பெட்டி பெட்டியாக மெயின் ·ப்ரேம் விளம்பரங்கள். இந்து தொடங்கி தினத்தந்தி முதற்கொண்டு திண்டிவனம் டைம்ஸ் வரை எங்கும் மெயின் ·ப்ரேம், எதிலும் மெயின் ·ப்ரேம். உலகத்திலுள்ள அனைத்து அபூர்வமான பெயர்களிலும் மெயின் ·ப்ரேம் கோச்சிங் சென்டர்கள் இருப்பதாகத் தெரிந்தது. கூடவே, COBOL, JCL, DB2, IMS, CICS, VSAM என்று ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு, பூச்சிகள் பறந்தன.

அப்பாதான் சொன்னார், "டேய்! அடையார்ல ஒரு அட்ரஸ் தர்றேன். நாளைக்குப் போய் பார்த்து ஒரு மூணு மாசம் கோர்ஸ் சேர்ந்துக்கிடு".

கோயிஞ்சாமி தன் வாழ்க்கையில் ஒரு மெயின் ·ப்ரேமுக்கு (முக்கியக் கட்டம் என்று தமிழில் வழங்கப்படும்) வந்துவிட்டதாக உணர்ந்து விடியற்காலையில் எழுந்து தலைக்குக் குளித்து விபூதி இட்டுக்கொண்டு பக்திபூர்வமாகக் கோச்சிங் சென்டருக்குச் சென்றான். தமிழ்நாடு அரசுக் கூட்டுறவு நியாய விலை விற்பனை அங்காடியை அடுத்து அதே சாயலில் இருந்த அந்தக் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் பெஞ்சு பலகை போட்டு ஒரு ரிசப்ஷனும் அங்கே சட்டைக்குள் ஒளிந்திருந்த ஒரு ஊழியரும் அவனை வரவேற்றனர்.

"உள்ளே தாம்பா கிளாஸ் நடக்குது. அப்பா ஏற்கனவே போன் போட்டு சொல்லிட்டாரு. கம்பியூட்டர் ரூமுக்குப் போ. செருப்பை வெளிய கழட்டி வெச்சுடு".

அப்போதுதான் தொடங்கியிருந்த வகுப்பில் இவனைப் போலவே ஏழெட்டு கோயிஞ்சாமிகள். தியரி கிளாசும் பிராக்டிகல் கிளாசும் மானசீகமான சுவரெழுப்பிப் பிரிக்கப்பட்டிருந்தன. MVS என்று தொடங்கி அந்த ஆள் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, இரண்டொரு நிமிடத்தில் கோயிஞ்சாமியிடம் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட ஒரு கத்தை காகிதங்கள் ஸ்பைரல் பைண்டாகத் தரப்பட்டன.

அப்போதுதான் முதன்முதலில் மெயின் ·ப்ரேம் என்பது உலகத்திலேயே பழம்பெருச்சாளி கம்பியூட்டர் என்று ஒருவாறு புரிந்துகொண்டான் கோயிஞ்சாமி. அதுவாவது புரிந்த சந்தோஷத்தில் பிராக்டிகல் கிளாஸ் போக, அங்கே அனைத்து கம்பியூட்டர்களும் கருப்பு கலர் பேண்டும் பச்சை சட்டையும் அணிந்திருந்தன. மவுஸ் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போனான். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு ஒரு ·பைல் உருவாக்க முயற்சிக்கும்போது மாஸ்டர் வந்து "அது ·பைல் கிடையாது, டேட்டாசெட்" என்றார். "எதோ ஒரு கருமம்" என்று முணங்கிக்கொண்டே ஒரு விசையைத் தட்டியவுடன் சகலமும் நின்றுபோனது. கணித்திரையின் கீழ் இடது ஓரமாக சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதர் போல ஒரு உருவம் தோன்ற, மாஸ்டர், "அது அப்பிடிதாம்பா! கொஞ்சம் ஸ்லோவா தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்" என்றார்.

கொஞ்ச நேரத்தில் இரவாகிவிட மெயின் ·ப்ரேமுடன் கோயிஞ்சாமியின் முதலிரவு தொடங்கியது. மூன்று மாத காலம் உருண்டோடியது.

அப்பாதான் சொன்னார், "டேய்! ஐ.பி.எம்-ல கால் ·பார் பண்ணியிருக்கான் பாத்தியா? நான் உங்க சென்டர் மாஸ்டர் கிட்ட ஏற்கனவே பேசி ஏற்பாடு பண்ணிட்டேன். போயி டாகுமெண்ட்ஸ் எல்லாம் வாங்கிகிட்டு இன்டர்வியூ போயிட்டு வா!".

கோயிஞ்சாமியின் மெயின் ·ப்ரேம் கோர்ஸ் சான்றிதழும் கூடவே ஈ-·பண்ட்ஸ் நிறுவனத்தில் இவன் ஒரு வருடம் மூன்று மாதம் பணிபுரிந்த அனுபவச் சான்றிதழும் தயாராக இருந்தன. கோயிஞ்சாமிக்கு வழக்கம் போலவே ஏதும் புரியவில்லை.

"தம்பீ! இந்தக் காலத்துல் டூப்ளிகேட் அனுபவம் காட்டாம உன்ன மாதிரி பசங்களுக்கு வேலை எங்கே கெடைக்குது சொல்லு? இதுக்காகவேதான் ஈ-·பண்ட்ஸ், டிசிஎஸ், கோவான்ஸிஸ் மாதிரி கம்பெனி லெடர் பேட் ரெடியா வெச்சிருக்கோம். கொஞ்ச நேரம் இரு. ஈ-·பண்ட்ஸ்ல நீ செஞ்ச வேலை என்ன, என்னென்ன கத்துக்கிட்டே, என்னென்ன பிரச்னை வந்தது, எப்பிடி சமாளிச்சே எல்லாம் சொல்லித் தரேன். இன்டர்வியூல இதுதான் கேப்பாங்க" என்றார் மாஸ்டர்.

ஆயிற்று இன்றோடு இரண்டு வருஷம். பெங்களூரில் எங்காவது பாஸ்ட் ·புட் உணவகத்தில் நின்றுகொண்டே இட்லியும் இனிக்கும் சாம்பாரும் விழுங்கி, புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டிருக்கும் ஐ.பி.எம் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமியைப் பார்த்தால் நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள்.

4 Comments:

At June 29, 2005 1:09 AM, Anonymous Anonymous said...

:)

 
At June 29, 2005 2:16 AM, Blogger KARTHIKRAMAS said...

// ஒரு மெயின் ·ப்ரேமுக்கு (முக்கியக் கட்டம் என்று தமிழில் வழங்கப்படும்) //

முக்கிய சட்டம் இல்லையா?

 
At June 29, 2005 10:51 AM, Blogger கோயிஞ்சாமி4 said...

ஆமாம் ஐயா! ஆனாலும் நம் கதைக்கு சட்டம் தேவைப்படவில்லையே, கட்டம் தானே தேவைப்பட்டது. எனவே, "லெயிட்டா லெப்ட்ல கட் பண்ணி ரெயிட்ல வாங்கிகினேன்" :)

 
At July 12, 2005 2:20 PM, Blogger வீ. எம் said...

நேத்து சாயந்திரம் ஒரு 5 மனிக்கு பெங்களூர் M G ரோட்ல ஒரு "பெங்களூர்" டாஸ்மாக்ல கோல்ட் பிரேம் கோயிஞ்சாமி பார்த்தேன்.. உங்க கிளப் மெம்பர எல்லாம் கேட்டதா சொல்ல சொன்னாரு ..சொல்லிட்டேன்..
வீ எம்

 

Post a Comment

<< Home