Thursday, June 16, 2005

அத்வானி பாகிஸ்தானி

ஸஞ்சயா, அத்வானி பிரச்னை என்ன என்பதை விளக்கிச் சொல்லக்கூடாதா. எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் இதைப்பற்றித்தானே எழுதுகிறார்கள், ஆனால் எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை என்றான் கோயிஞ்சாமி.

"எதைச் சொல்லணும்? நடந்ததையா? நடக்கப் போறதையா? இல்ல ஏன் நடந்ததுங்கறதையா?"

"எல்லாத்தையுமே, ஆனால் எனக்குப் புரியற மாதிரி"

"ஒரு ராகி மால்ட், ஒரு டீ" என்று ஆர்டர் கொடுத்து பெஞ்சில் அமர்ந்த ஸஞ்சயன், "முதல்ல சில கேள்விகளைக் கேட்பேன், உனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்ன்னு பார்க்கணும்" என்றான்.

"ராகி மால்ட் உனக்கா இல்லை எனக்கா?" என்றான் கோயிஞ்சாமி.

"உனக்கெல்லாம் டீதான். அது கிடக்கட்டும், அத்வானி பத்தி உனக்கு என்ன தெரியும்"

"ஒரு அரசியல் கட்சித் தலைவர். இந்துத்வா கொள்கைக்காரர். ராமர் கோயில் கட்டுவேன்னு தேர் வுட்டார். இப்ப பால் மாறிட்டார் போலட் தெரியுது"

"சரி, சங் பரிவார்னா என்னன்னு தெரியுமா?"

"ஏதோ கொஞ்சம். ராஷ்டிரிய சுவயம் சேவக்னு ஒரு அமைப்பு. காக்கி டிரவுசர், காக்கிச் சட்டை போட்டுகிட்டு, கைல கம்பு வெச்சுகிட்டு உடல் பயிற்சி செய்வாங்க. நாக்பூர்ல தலைமை அலுவலகம். ரொம்ப நாளா, சுதந்தரத்துக்கு முன்னாடிலேர்ந்து இருக்காங்க. நாடு முழுக்க இருக்காங்க.

அப்புறம் விஸ்வ ஹிந்து பரிஷத். இவங்க 1980லதான் வெளில தெரிஞ்சாங்க. இவங்களோட கொள்கைகள் என்னன்னு சரியா தெரியல. ஆனா முஸ்லிம்கள்கிட்ட வம்புக்கு போறது முக்கியமான கொள்கையா வச்சிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. அயோத்தில ராமர் கோயில், த்வாரகால கிருஷ்ணர் கோயில், காசில சிவன் கோயில் எல்லாம் கட்டணும்னு ஆசைப்படறாங்க. ஆனா அங்கெல்லாம் இருக்கற மசூதிகள இடிச்சுட்டு அங்கத்தான் கோயில் கட்டணும்னு பாக்கறாங்க. அதத் தவிர இந்தியா முழுக்க லட்சக்கணக்கான மசூதிகள தகர்த்துட்டு அங்கெல்லாம் கோயில் கட்டணும்னு நினைக்கறாங்க"

"அவ்வளவுதானா?"

"அப்புறம் நம்மூர்ல இந்து முன்னணின்னு ஒரு க்ரூப். அவங்களும் விஸ்வ ஹிந்து பரிஷத்-தானா, இல்லை அவங்களோட தொடர்புடைய ஒரு கூட்டமான்னு தெரியல."

"சரி, பஜ்ரங் தள்னு கேள்விப்பட்டிருக்கயா"

"ம்.. படிச்சுருக்கேன். வானர சேனைன்னு அர்த்தமாம். கைல திரிசூலத்தை வச்சிகிட்டு வம்புக்குன்னே அலையறவங்க மாதிரி தோணுது"

"சரி, இந்த மாதிரி சில அமைப்புகள், அதோட பாரதீய ஜனதா கட்சி, அந்தக் கட்சியோட மாணவர் பிரிவு - அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், தொழில் சங்க அமைப்பு, இன்னம் சில கல்வி அறக்கட்டளைகள், ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பொருளாதாரச் சிந்தனைகள் திங்க் டாங்க் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் - இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து சங் பரிவார்னு சொல்றது. எல்லாமே ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் அப்படிங்கற சங்கத்தின் கருத்துக்கள் அடிப்படைல உருவானதால சங்கக் குடும்பம்னு பொருள்."

"சரி. இதுக்கும் அத்வானி பிரச்னைக்கும் என்ன தொடர்பு?"

"இவங்கள்ளாம் சங்-கோட பிள்ளைகள் இல்லையா? இந்த சங் சில அடிப்படைக் கொள்கைகளை வச்சிருக்கு. அதுல ஒண்ணு பிரியாத இந்தியாவை மீண்டும் - ஒரு காலத்துல - திரும்பி உருவாக்கணும்ங்கறது. அதுக்க அகண்ட பாரத் - அதாவது பெரும்-பாரதம்னு ஒரு பேர் வச்சிருக்காங்க. அதுல புராண இதிஹாசங்கள் நடந்த இடமெல்லாம் ஒண்ணா சேர்ந்ததுதான் அகண்ட பாரதம்."

"அடடா, ஸஞ்சயா, அப்ப மேட்டரு ஒன் ஒலகத்தப் பத்தினதுதான். ஆமா இந்த மஹாபாரதப் போர் நடந்ததே அதெல்லாம் நீ கூட ரன்னிங் கமெண்டரி கொடுத்தயே, அந்த சமயத்துல எந்தெந்த இடமெல்லாம் உங்காளுங்க இருந்தாங்க?"

"இப்ப இருக்கற ஆஃப்கானிஸ்தான்ல பல பகுதிகள், பாகிஸ்தான் நிச்சயமா உண்டு. கொஞ்சம் முன்னாள் சோவியத் யூனியன்ல இருந்த, இப்ப மத்திய ஆசிய நாடுகள் என்கிற சில இடங்கள். இப்படி பல இடங்களும் உண்டு."

"சரி, இதெல்லாம் நடக்கற காரியமா? இந்த அகண்ட பாரதத்துல சீனா எதுவும் இல்லையே? இல்ல, ஏன்னா நாம போய் அகண்ட பாரதத்தை கொடுன்னு அவங்கிட்ட கேக்கப் போக, வீண் சண்டையாகிடக் கூடாதே"

"இந்த அகண்ட பாரதத்த பலரும் விரும்பினாங்க. ஆஃப்கானிஸ்தான் போனாக்கூட பரவால்ல, ஆனா பாகிஸ்தான் பிரியக்கூடாதுன்னு ஹிந்து மஹாசபா, ஆர்.எஸ்.எஸ் போன்ற குழுக்கள் சுதந்தரம் சமயத்துல சண்டை போட்டாங்க. அதோட தொடர்ச்சியாத்தான் மஹாத்மா காந்திதான் இந்தியா பிரியக் காரணம்னு நாதுராம் கோட்சேங்கற ஒரு ஹிந்து மஹாசபா ஆள், ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கருக்கு நெருங்கி அறிமுகமானவன் காந்திய சுட்டுட்டான்."

"ஓ, அப்படியா! நான்கூட கமலஹாசன்தான் காந்திய சுடப்பாத்தாருன்னு ஏதோ ஒரு படத்துல பாத்தேனே... பேரு கூட மறந்துடுச்சு. ஏதோ சாமி பேரு கூட அந்தப் படத்துல வரும்!"

"ஹே ராம்! இந்த கோயிஞ்சாமியைக் காப்பாத்து! மூதேவி! நான் ஒனக்கு சீரியஸா வரலாறு பாடம் நடத்தறேன், நீ சினிமா சினிமான்னு மெட்ராஸ் சாக்கடைல விழறியே!"

"ஆஹா கரெக்டு. மெட்ராஸ் சாக்கடைலதான் கமல் கூட... அட! ஆமா! ஹே ராம்!"

பெருமூச்சு விட்ட ஸஞ்சயன் "ரெண்டு வாழப்பழம் நாயரே" என்றான்.

கோயிஞ்சாமி மீண்டும் ஸஞ்சயன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், ஸஞ்சயன் தொடர்ந்தான்.

"மொதல்ல அகண்ட பாரதம் கிடைக்கலேன்ன ஒடனே காந்தியை போட்டுத்தள்ளியாச்சு. அடுத்து பெரிய வில்லன் மொஹம்மத் அலி ஜின்னா. இந்தாளு இல்லன்னா பாகிஸ்தான் பிரிஞ்சு போயிருக்காது இல்லையா? அதுனால அந்தாளு ஒரு ராஸ்கோலு அப்பிடின்னு சங் பரிவாரிகள் முடிவு கட்டினாங்க. பாகிஸ்தான் அப்பிடிங்கற நாட்டு மேலயே ஒரே காண்டு. இந்த வெறுப்பு சாதாரண வெறுப்பு இல்ல. எப்படி பாகிஸ்தான்ல ஸ்கூல் புத்தகங்கள்ள இந்தியா மேல வெஷம் தூவினாங்களோ அதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் ஷாகால கையக் காலத் தூக்கி டான்ஸ் ஆடறப்போ பாகிஸ்தான் ஒழிகன்னு கத்திகிட்டே செய்வானுங்க போல இருக்கு."

"சரி, அதுக்கும் அத்வானிக்கும் என்ன சம்பந்தம்?"

"அத்வானி பாரதீய ஜனதா தலைவர். ஆனா ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்னு பெருமையோட சொல்லிகிறேன்னவரு. அந்த சங்கத்துல என்னன்னா சங்கத்தோட தலைவர்தான் சுப்ரீம். அவரு என்ன உளறினாலும் எல்லாரும் கை தட்டனும். எதுத்து கேக்கக் கூடாது. அந்த தலைவர் சாகற வரைக்கும் அவர்தான் தலைவர். எதுத்தா நீ வெளில போலாம். அவ்வளவுதான். பயங்கர பிற்போக்குக் கொள்கை. பொம்மனாட்டிங்கல்லாம் சமையல் ரூமுக்குள்ளாற இருக்கணும். சமைக்கணும், சோறு போடணும், புள்ளை பெத்துக்கணும். அது மட்டும் செய்யணும் அப்பிடின்னு சொல்றவங்க. மொத்தத்துல கூறு கெட்ட மூதேவின்னு வச்சிக்கயேன். ஆனா அந்தாளு சொன்னா எல்லா உறுப்பினனும் கேக்கணும். இப்ப நம்ம துணை ஜனாதிபதி இருக்காருல்ல பைரோன் சிங் ஷேகாவத். அவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். ஆனா ஆர்.எஸ்.எஸ் தலைவரு சுதர்சன் யோவ் பைரோன், வந்து நடு ரோட்டுல மூச்சா போ அப்பிடின்னா உடனே வந்து செய்யணும்!"

"அடப்பாவிகளா!"

"ஆமா. ஆனா அத்வானி என்ன செஞ்சிட்டாரு, பாகிஸ்தான் போய் ரெண்டு மூணு தப்புக்காரியம் பண்ணிட்டாரு - ஆர்.எஸ்.எஸ் பார்வைல"

"அதென்ன?"

"மொத மொத பாகிஸ்தான் அப்பிடிங்கற நாடு இருக்கறதை ஒருவகைல அங்கீகரிச்சுட்டாரு. அதனால் அகண்ட பாரதம் அவுட்டு! அப்புறம் ஜின்னா பாகிஸ்தான் எப்படி இருக்கணும்னு 11 ஆகஸ்ட் 1947ல பேசின பேச்சு பிரமாதமா இருந்துச்சு. சூப்பர் அப்பு அப்புடின்னுட்டாரு. இது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எகிறிடுச்சு! அத்தோட விட்டாரா, அயோத்யா மசூதி இடிப்பு துக்ககரமான நாள் அப்புடின்னு பாகிஸ்தான் மக்கள்ட்ட மன்னிப்பு கேட்டாரு. இது விஸ்வ இந்து பரிஷதுக்கு ரொம்பவே டென்ஷன ஏத்திவிட்டுடுச்சு."

"ஆக, சங் பரிவாரத்தின் அடிமடில கைய வச்சுட்டாரு!"

"கரெக்டு. பாத்தானுங்க இவனுங்க. அத்வானி பதவி விலக வேண்டும்னு போஸ்டர் அடிச்சுட்டானுக."

"இவரு பேசாம போடா ஜாட்டான்னு சொல்லிருக்கலாமே"

"சொல்லலாம். ஆனா ஒரு அரசியல் வெளயாட்டு வெள்ளாடிப் பாக்கலாமேன்னு நினைச்சாரு. நமக்கு என்னா சப்போர்ட் இருக்கு பார்ட்டிக்குள்ளாறன்னும் ஒரு கை பாக்கணுமில்லையா? அப்புறம் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி தொல்லை வேற ஜாஸ்தியாயிகிட்டிருக்கு. அவனுங்க இல்லாம நாம பொழைக்க முடியுமான்னு டெஸ்ட் பண்ணனும். இந்த பாஜகல நெறைய தலைவருங்க ஆர்.எஸ்.எஸ் காரனுங்க. வாய்ல நொரை தள்ள பேசற முரளி மனோஹர் ஜோஷி மாதிரி ஆளுங்க. உடனே அவனுங்க எதிர்கொரலு வுட்டாங்க"

"அப்புறம் என்னாச்சு"

"அத்வானி ராஜினாமா எழுதி கொடுத்து, என் மேல நம்பிக்கையிருந்தா என்னை லீடரா வச்சுக்கங்க, இல்லாட்டி போங்கடான்னாரு"

"அப்புறம்?"

"ஒரு மாதிரி செட்டில் பண்ணிருக்காங்க இப்ப. அத்வானி தொடர்ந்து பாஜக தலைவரா இருப்பாரு. ஆனா ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி ரெண்டுபேருமே ரொம்ப தொல்லை பண்ணுவானுங்க. ஏன்னா பாஜகல எங்க பாத்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரா இல்லாட்டியும் அவங்க கொள்கைல வளர்ந்தவங்க"

"அப்ப பாஜக அவுட்டா?"

"இப்பவே பாஜக கொஞ்சம் அடிவாங்கித்தான் இருக்கு. மே 2004 எலெக்ஷனுக்கு அப்புறம் தளர்வுதான். அத்வானி தான் மண்டையப் போடறதுக்குள்ள கொஞ்சம் கட்சியை மாத்திடலாம்னு யோசிக்கிறார்னு படுது. இந்தப் பிரச்னையே இப்பத்தானே ஆரம்பமாகுது? இனிதான் பாக்கணும் எப்படி இன்னமும் அதிகமாவுதுன்னு."

"வாஜ்பாய் அத்வானி பக்கம் போலத்தெரியுது?"

"ஆமா. அவருக்கு கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கும். எல்லாரும் சேர்ந்து அத்வானியை டிஃபெண்ட் பண்ணனும்னு சொல்லியிருக்காரு"

கோயிஞ்சாமியால் இதுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்பதால் எழுந்து பக்கத்தில் இருந்த குட்டிச்சுவரை நோக்கி சிறுநீர் கழிக்கச் சென்றான்.

1 Comments:

At June 16, 2005 11:38 AM, Blogger Goinchami_senior said...

நன்று நன்று.

ஆனாக்கெ, அண்ணாச்சி அதுவானி இன்னாத்துக்காக பாக்கிஸ்தானுக்குப் போனாருன்னு சொல்லலியே? சொம்மா அனிமூனு, மினிமூனுக்காச்சும் போனாரா? யாரானா அவுர கூப்டாங்களா? அதுவானிய கூப்டற அளவுக்கு பாக்கிஸ்தானுல எவனுக்கு தில்லு கீது ? இந்த மேட்டரெல்லாம் வரத்தாவலியா?

 

Post a Comment

<< Home