Friday, June 17, 2005

வீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்?

இப்படியொரு கஷ்டம் இருக்கமுடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை கோயிஞ்சாமி.

கடந்த சில மாதங்களாக கோயிஞ்சாமி ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. எந்தப் புதிய பணியை ஒப்புக்கொண்டாலும் ஆர்வமும் அக்கறையுமாக உழைக்கும்
கோயிஞ்சாமியாகப்பட்டவன், இந்தப் பணியையும் அவ்வண்ணமே மேற்கொண்டான்.

ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்னையால், தான் எழுதிக்கொண்டிருந்த 254வது காட்சியின்போது துவண்டுபோய் நேற்றிரவு தரையில் விழுந்தான். அவனது கணினி அநாமதேயமாக இரவெல்லாம் அப்படியே எழுத
ஆளில்லாமல் காத்துக்கிடந்தது என்று பிடிஐ செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

கோயிஞ்சாமியின் பிரச்னைதான் என்ன?

ஒரு தொடர் என்றால் அதில் நான்கு அல்லது ஐந்து வீடுகள், அந்தந்த வீட்டு மனிதர்கள் , அவர்களின் கதைகள் என்று தான் நகரும். காட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். இதற்குப் பல்வேறு
பொருளாதாரக் காரணங்கள் உண்டென்பதை கோயிஞ்சாமி அறிவான்.

ஆனால் வீட்டுக்குள் ஒவ்வொரு காட்சி தொடங்கும்போதும் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

இங்கேதான் கோயிஞ்சாமி மாட்டிக்கொண்டான்.

பத்து முறை சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். இருபது முறை துணி துவைத்துக்கொண்டிருக்கலாம். ஏழெட்டு முறை பேப்பர் படித்துக் கொண்டிருக்கலாம். பிறிதொரு முறை போன் பேசிக்கொண்டிருக்கலாம்.
பெருக்கிக்கொண்டிருக்கலாம், துடைத்துக்கொண்டிருக்கலாம், ஒட்டடை அடிக்கலாம், ஒன்றுக்குப் போகலாம் (ஆனால் காட்ட முடியாது), துணி மடிக்கலாம், சமைக்கலாம், சண்டை போடலாம்.

வேறென்ன செய்யலாம்?

மேற்கண்ட ஒவ்வொரு செயலையும் கோயிஞ்சாமி குறைந்தது இருபது முறை பயன்படுத்தி, எழுதிவிட்டான். புதிது புதிதாக வீட்டில் மக்கள் என்னென்ன செய்வார்கள் என்று தெரியாமல் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத்
தொடங்கினான்.

கோயிஞ்சாமி முதலில் தன் வீட்டில் என்னென்ன காரியங்கள் நடக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினான்.

ம்ஹும். சுவாரசியமானதொரு காட்சி அமைப்புக்கு உகந்ததாக ஏதும் பொதுவில் நடப்பதில்லை என்பதைக் கண்டான். பெரும்பாலும் அவனது மனைவி, குழந்தையுடன்தான் அமர்ந்திருக்கிறாள். அல்லது சமையல். துணி
மடிப்பது. அவ்வளவுதான். எப்போதாவது தன் பிறந்தவீட்டு மனிதர்களோடு தொலைபேசியில். ஆனால் இதெல்லாம் ஒரு காட்சித் தொடக்கமாகாது. சம்பந்தப்பட்ட காட்சியில் என்ன நிகழப்போகிறதோ, அதனுடன்
கொஞ்சமாவது பொருந்தும்படியான தொடக்கம் அவசியம்.


கோயிஞ்சாமியின் அம்மாவின் நடவடிக்கைகளில் சில நல்ல காட்சித் தொடக்கங்கள் இருக்கின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் அவுட் டோர் லொக்கேஷன் எதிர்பார்க்கின்றன. வீதி. எதிர்வீடு.
மொட்டைமாடி. இத்தியாதிகள். சீரியல்களின் முக்கிய நிபந்தனையே, ஹாலைத் தாண்டிக் காட்சி நகரக்கூடாது என்பதுதான் என்பது கோயிஞ்சாமியை மிகவும் பயமுறுத்தியதால், அவனது அம்மாவின் வீதி விசாரணைகள், நீதி விசாரணைகள், மொட்டை மாடி டு மொட்டை மாடி தகவல் பரிமாற்றம் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போனது.

பாவம் கோயிஞ்சாமி என்னதான் செய்வான்?

வீட்டில் நிகழும் விஷயங்களின் முழுப்பட்டியல் ஒன்றை அவனுக்கு யாராவது தந்தால் கோடி புண்ணியம். பெரிய விஷயமாக இருக்க வேண்டியதில்லை. மிகவும் சாதாரண காட்சியாகவே இருந்தால் போதும்.

நேற்று கோயிஞ்சாமி ஒரு காட்சி எழுதினான். வீட்டில் அம்மா, தன் மகனை உட்காரவைத்து நகம் வெட்டிவிட்டபடியே பேசுவதாக.

ஷூட்டிங் நடைபெற்ற இடத்திலிருந்து அவனுக்கு திடீரென்று தயாரிப்பு நிர்வாகி போன் செய்தார்.

"ஏன் கோயிஞ்சாமி! திடீர்னு இந்தமாதிரியெல்லாம் சீன் எழுதி ஏன் எங்க உசிர வாங்கறிங்க?" என்கிற அவரது புலம்பல் முதலில் அவனுக்குப் புரியவில்லை. தயாரிப்பு நிர்வாகி நான்கு அல்லது ஐந்தாவது பத்தியில்தான் விஷயத்துக்கே வந்தார்.

"நீங்கபாட்டுக்கு நகம் வெட்டறமாதிரி எழுதிட்டிங்க. இதெல்லாம் முன்னால சொல்லக்கூடாதா? லைட்டிங்கெல்லாம் முடிச்சிட்டு ஷாட்டுக்குப் போவசொல்ல, எங்கடா நெயில்கட்டர்னு டைரக்டரு கேக்கறாரு.
கிருகம்பாக்கம் வீட்டு லொக்கேஷன்ல நான் நெயில்கட்டருக்கு எங்க போவேன்?"

கோயிஞ்சாமி மயங்கி விழுந்ததன் காரணம் மேற்சொன்னதுதான். ஆகவே அன்பர்களே! கோயிஞ்சாமி தன் சங்கடத்திலிருந்து தப்பிக்கும்விதமாக, செட் ப்ராபர்டி அதிகம் கேட்காத, எளிய வீட்டு சூழல்களைப் பட்டியலாகத்
தந்தால் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மெகா சீரியல் இல்லாத வாழ்க்கை அமைய இறைவனைப் பிரார்த்திப்பான்.

2 Comments:

At June 17, 2005 5:33 PM, Anonymous Aapka Dhosth said...

I'll tellifying
yosicha piragu

 
At June 18, 2005 10:51 AM, Blogger கோயிஞ்சாமி3 said...

மசூதித் தெரு வழியாக வீட்டுக்குள் வந்த பொழுது கோ.சா.க்களின் வீடுகளில் காணப்பட்ட காட்சிகள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1) வீட்டில் ஒரு ஒரு கோ.சா. செல்ஃபோன் ரீசார்ஜ் செய்யும் பணியில் இருக்கிறது. ப்ளக்பாய்ண்டில் ஸ்விட்ச்சை அனைத்துப் போடுகிறது. செல்ஃபோனைக் கையில் எடுத்து அட்ஜஸ்ட் பண்ணுகிறது.

2) டிவியில் கெட்டிமேளம் பார்த்துக்கொண்டிருக்கிறது ஒரு கோ.சா.

3) தலைகாணிக்கு உறை மாற்றுகிறது இன்னொரு கோ.சா.

4) சாமி ஃபோட்டோவை துடைத்து வைக்கிற்து ஒரு கோ.சா.

5) பேப்பரில் குறுக்கெழுத்துப் போட்டியை சால்வ் பண்ணிக்கொண்டிருக்கிறது ஒரு கோ.சா.

6) ஷேவ் பண்ணிக்கொண்டிருக்கிறது ஒரு ஆம்பள கோ.சா.

7) ஏதோ யோசனையில் தலை வாரிக்கொண்டிருக்கிறது ஒரு பெண் கோ.சா.

8) இது ஒரு பரபரப்பான காட்சி - வீட்டில் புகுந்த ஒரு எலியை/பூராணைத் தேடி அடிக்கும் பணியில் ஒரு வீரதீர கோ.சா.

9) வீட்டுக் குழந்தைக்கு/பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு ப்ரௌன் அட்டை (பாட ஏட்டுக்கு) போட்டுத்தந்து கொண்டிருக்கிறது வயதான ஒரு கோ.சா.

10) பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய் நாணயங்கள் இரண்டை பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது ஒரு கோ.சா.

 

Post a Comment

<< Home