Thursday, June 23, 2005

மயில் டிசைன் போட்ட ஃப்ளோரசண்ட் நீலச்சட்டை

கோயிஞ்சாமியின் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவனுக்கு ஒரு பரிசு கொண்டுவந்திருந்தார். அழகானதொரு சட்டை. முழுக்கைச் சட்டை. மார்பின் இருபுறங்களிலும் பட்டையாக பார்டர் போட்ட ஃப்ளோரசண்ட் நீல நிறச் சட்டை.

அதுநாள் வரை கவனம் கவராத சட்டைகளை மட்டுமே அணிந்து பழக்கப்பட்ட கோயிஞ்சாமி, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அமைந்த அந்த ஜில்பான்ஸ் சட்டையைப் பார்த்ததும் மிகுந்த பரவசமாகிவிட்டான்.
இன்றைக்கு நாட்டு மக்களை ஒரு வழி பண்ணிவிடுவது என்கிற முடிவுடன் மறுநாள் அந்தச் சட்டையை அணிந்துகொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

"ஐயய்ய்யே!" என்று முதல் பார்வையில் கலவரமூட்டும் விதமாக ரியாக்ட் செய்த அவனது மனைவி, ஓரிரு வினாடிகள் கழித்து, 'நல்லாத்தான் இருக்கு'என்று சொன்னதில் சற்றே தெம்படைந்து, கம்பீரமாகப் புறப்பட்டான்.

வீதியில் இறங்கியதும் ஒரு நாய் அவனை முறைத்தது. அவனது மூலவர் திருமேனிக்கு அந்தச் சட்டையின் கண்ணைப்பறிக்கும் நீலம் சரியான எதிரிடையாக அமைந்திருப்பது எப்படியோ அந்த நாயின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். எப்போதும் பார்த்ததும் மரியாதையாக நகர்ந்து போகும் அந்த ஜந்து, அன்றைக்கு 'உர்ர்..ஹுர்ர்' என்று கொஞ்சம் மிரட்டியது.
கோயிஞ்சாமி சற்றும் மனம் கலங்காமல் அதை திருப்பி முறைத்துவிட்டு (ஆனால் பதிலுக்கு 'உர்ர் ஹுர்ர்' என்று சத்தமெழுப்பவில்லை) வீரமாக நடக்கத் தொடங்கினான்.

"என்ன சார்.. கலக்கறிங்க?" முதல் கணை, அவன் தினமும் சந்திக்கும் தெருமுனைக் கடைக்காரரிடமிருந்து வந்தது.

"சொல்லுங்க நாடார். நல்லாருக்கா?" என்று ஆர்வமுடன் கேட்டான் கோயிஞ்சாமி.

"உம்ம்.. பிரமாதம்.. செண்பகமே செண்பகமே ராமராஜன் திரும்பி வந்த மாதிரி இருக்கு. என்ன நீங்க கொஞ்சம் கலர் கம்மி" என்றார் கடைக்காரர். என்னவோ ராமராஜனைப் பக்கத்தில் நின்று பார்த்தவர் மாதிரி.

கோபம் கொண்ட கோயிஞ்சாமி, ராமராஜன், கருப்பு நிறம்தான் என்பதை எடுத்துச் சொல்லியும் கடைக்காரர் நம்ப மறுத்தார். "அரை டிராயர்ல வரசொல்ல மொழங்கால் கூட சேப்பா இருக்கும் சார்.. என்னா சார் இப்பிடி சொல்றிங்க?" என்றார். ராமராஜனின் முழங்கால் வரை ரசித்தவர் அவர் என்பது தெரியாத கோயிஞ்சாமி சற்றே தயங்கினான். பிறகு அவர் பேச்சு கா விட்டுவிட்டு மேலே நடந்தான்.

பஸ் ஸ்டாண்ட் வரை தினமும் அவனை அழைத்துச் சென்று விடும் ஆட்டோ டிரைவர், "டக்கரா இருக்குது சார்.. எங்க, பர்மாபஜார்ல புட்ச்சிங்களா?" என்று கேட்டார்.

பர்மா பஜாரில் இத்தனை கலாபூர்வமான சட்டைகளெல்லாம் இருக்கிறதா என்ன? அவனது அயல்தேசத்து நண்பர் குறித்தும் அவரது அன்பைக் குறித்தும் அவருக்கு விளக்கினான்.

"இன்னாது? அவுங்க ஊரு தேசிய உடையா? சர்தான்!" என்று டிரைவர் இழுத்த ராகம் கிட்டத்தட்ட குந்தளவராளி போல இருந்தது. "நமக்கு அப்பிடி எதனா கீதா சார்?"

ஏன், வேட்டி சட்டைதான் நமது தேசிய உடை என்று கோயிஞ்சாமி சொன்னான்.

"அது சர்தான்சார். இந்தமாதிரி சொம்மா ஜம்முனு, டக்கரா எதனாச்சும்.. இந்த ராஜிவ்காந்தியெல்லாம் மாட்டிக்குவாங்களே, மாவு மெசினு கொழா மாதிரி ஒரு கோட்டு.. அது நம்ம தேசிய உடைங்களா?"

டிரைவராகப்பட்டவர் தன்னை மட்டுமல்லாமல் தேசத் தலைவர்களையும் ஒருங்கே அவமானப்படுத்துவதாக நினைத்த கோயிஞ்சாமி, மேற்கொண்டு விவாதிக்காமல் அமைதி காத்தான்.

பஸ்ஸில் அவனை ஒரு ஜீவனாக அதுவரை நினைத்துப் பாராதவர்களெல்லாம் அன்றைக்கு திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் நன்றாக இருப்பதாகவும் சொன்னார்கள். கிண்டலாகச் சிரித்தவர்களெல்லாம் பொறாமைக் காரர்கள் என்று அவன் முடிவு செய்தான்.

"ஐயே சன்னலுக்கு போடுற ஸ்கிரீனவா சொக்காதச்சிப் போட்டுக்கிற?" என்றாள் ஒரு வயதானகிழவி. கடவுளே! எந்த ஜன்னல் ஸ்கிரீன் இத்தனை அழகாக இருக்கமுடியும்!

கோயிஞ்சாமிக்கு ஒரு விஷயம் புரிந்தது. சாதகமாகவோ, பாதகமாகவோ - அவனது அந்தச் சட்டை பற்றிப் பேசாமல் யாராலும் இருக்கமுடியவில்லை! பூமியில் அவன் அவதரித்த புண்ணிய தினத்திலிருந்து அந்த்ச் சட்டையை அணிவதற்கு முந்தைய தினம் வரை, ஒரு நாள்கூட யாரும் அவ்னையோ, அவனது ஆடை அலங்காரத்தையோ பொருட்படுத்திப் பேசியதில்லை. ஒரே ஒரு சின்ன மாறுதல்தான் அவன் செய்திருந்தான். கண்ணைப் பறிக்கும் வண்ணம். மேலாக மார்பின் இருபுறமும் பட்டையாக சரிகை பார்டர் போட்டது போல (மயில் பொம்மைகள் நிறைந்த) ஒரு டிசைன். அவ்வளவுதான். ஒட்டுமொத்தத் தமிழகமுமா திரும்பிப் பார்த்துப் பேசும்?
இத்தனை நாள் கோயிஞ்சாமி எழுதிக்கிழித்த எந்த ஒரு கதை/கட்டுரை குறித்தும் கூட யாரும் அத்தனை பேசியதில்லை. ஒரு சட்டை என்ன வித்தை காட்டுகிறது!

அன்று முழுவதும் கோயிஞ்சாமியைப் பார்த்த அத்தனை பேரும் அவனது அந்தச் சட்டை குறித்துப் பேசாமல் இருக்கவில்லை. அருமை என்றார்கள், எருமை என்றார்கள். இப்பத்தாண்டா நீ ஒரு நிஜமான கோயிஞ்சாமி மாதிரி இருக்கே என்று புல்லரித்துப் பேசினார்கள்.

கோயிஞ்சாமி ஒரு முடிவுக்கு வந்தான். கவனம் கவர இதைக்காட்டிலும் உன்னதமான வழி வேறில்லை!

தனது வெளிநாட்டு நண்பருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, பத்து சட்டைகள் அதே போல ஃப்லோரசண்ட் ஆரஞ்சு, ஃப்ளோரசண்ட் மெஜந்தா, ஃப்ளோரசண்ட் பச்சை போன்ற நிறங்களில் எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்க முடிவு செய்தான்.

அன்றிரவு அவன் வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வெக்கை தாங்காமல் குடும்பமே வீதியில் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனைப் பார்த்ததும் அவனது தம்பியின் குழந்தை உரக்க குரலெடுத்துச் சொன்னது: "பெய்ப்பா.. குதுகுதுப்பகாரன்.. பெய்ப்பா குதுகுதுப்பகாரன்"

பெரியவர்கள் மாற்றிச் சொல்லியிருக்கலாம். குழந்தைகள் பொய்சொல்லாது. ஒரு முழுநாள் அந்த அருமையான சட்டையைத் தான் அவமானப்படுத்தியிருக்கிறோம் என்று அப்போது தான் புரிந்தது கோயிஞ்சாமிக்கு.

5 Comments:

At June 23, 2005 12:41 PM, Blogger கொங்கு ராசா said...

//ஃப்லோரசண்ட் ஆரஞ்சு, ஃப்ளோரசண்ட் மெஜந்தா, ஃப்ளோரசண்ட் பச்சை // ஃப்ளோரசண்ட் பச்சை -- இந்த கலர்ல நம்மகிட்ட ஒரு டவுசர் இருக்கு.. அதுக்கு மேட்ச்சா ஒரு சட்டை ரெகமெண்ட் பண்ணுங்கப்பா..

அதென்னா கோயிஞ்சாமி_சீனியர்... அப்போ நம்மள மாதிரி ஆளுக இளையகோயிஞ்சாமி'யா??

 
At June 23, 2005 2:38 PM, Blogger ravi srinivas said...

கோயிஞ்சாமி கருத்து கந்தசாமியின் இன்னொரு அவதாராமா இல்லை கூட்டு முகமூடியா :)

 
At June 23, 2005 3:42 PM, Blogger கோயிஞ்சாமி கிளப் said...

ஐயன்மீர்,

கருத்து கந்தசாமி என்பார் யாரென்று விளம்புவீரோ? இவ்விடம் கந்தசாமிகள் யாருமிலர். அனைவரும் கோயிஞ்சாமிகளேயாவர். தவிரவும் இது தனிநபர் யாரொருவரின் பதிவுமல்ல. இது ஒரு கூட்டுவலைப்பதிவாகும். இங்கு பங்குறுவோரின் பெயர்கள் பக்கத்தில் காணப்படுமேயன்றி, எழுதப்படுபவை யாவும் எமது கோயிஞ்சாமி அடையாளங்களிலேயெ வெளியாகும். கோயிஞ்சாமிகள் தம் சொந்தப்பெயரைப் பிரபலப்படுத்துவதில் நாட்டம் கொள்வதில்லை.

 
At June 23, 2005 6:48 PM, Anonymous Anonymous said...

சட்டை - இலக்கிய புத்தகம்
ராமராஜன் - எழுத்தாளர் சுஜாதா
ஆட்டோ டிரைவர் - விமர்சகர்
கிழவி - இதழ் ஆசிரியர்

- பென்ச் கோவிந்த்

 
At June 24, 2005 8:38 AM, Blogger காசி (Kasi) said...

சம்பந்தமில்லாதது:

கோயிஞ்சாமிகள் எழுத்து நடையைப் பாத்து, ரெண்டு பேரை ஊகிச்சேன். அப்ப பக்கத்தில பட்டியல் இருப்பதைப் பார்க்கலை. பாரா, ஷங்கர் ரெண்டும்தான் அது. அது ரெண்டும் இப்ப அங்கே இருக்கிறதைப் பாத்து ஒரு சந்தோஷம். நடத்துங்க

 

Post a Comment

<< Home