Wednesday, July 06, 2005

கும்பகோணத்தில் கோயிஞ்சாமி

'சனி நீராடு' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது சேர்ந்தார்ப்போல் வரும் சனி ஞாயிறு விடுமுறையில் ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்வாயாக! தண்ணீர்ப்பஞ்ச சென்னையிலிருந்து விடுபட்டு சனி நீராடுவாயாக என்று சொன்னது இதையே குறிக்கும்.

அப்படியான சனி ஒன்றில் நீராடும் பொருட்டு கோயிஞ்சாமி3 சென்னையை விட்டு கும்பகோணத்தின் அருகில் இருக்கும் திருவலஞ்சுழிக்குச் சென்றான். அங்கே இப்போது என்ன விசேஷம் என்பது வேறு விஷயம். திருவலஞ்சுழிக்கோயிலில் களப்பணி நேரம் கோயிஞ்சாமி தூங்கிக்கொண்டு காககி குருவிகளை எண்ணிக்கொண்டு இருந்தது வெத்தான விஷயம். ஆனால் மதியம் உணவு நேரம் கோயிஞ்சாமி சென்ற உணவகமே சத்தான விஷயம்.

பணியகத்தை நினைவு படுத்தும் (தூக்கம்தான்) உணவை முடித்துவிட்டு, காலாற நண்பர்களுடன் சாலையில் நடந்துகொண்டிருந்தான் கோயிஞ்சாமி. எதேச்சையாக ஒரு மளிகைக்கடையைப் பார்த்ததும் கோயிஞ்சாமியே சிரிக்கும் ஒரு காட்சி கண்ணில் பட்டது. மளிகைக் கடையில் கம்ப்யூட்டர் வைத்து பில்! பக்கத்தில் இருந்த கும்பகோணத்து நண்பரிடம் சொல்லியே விட்டான் கோயிஞ்சாமி.

"ஹா ஹா. கும்பகோணத்துல இப்படி ஒரு ஹை-டெக் மளிகைக்கடையா? சபாஷ், சபாஷ்"

இந்த கமெண்ட்டைக் கேட்டதும் கும்பகோண தேசப்பற்று மிக்க நண்பருக்கு மூளையில் பூகம்பம் வந்ததால் கன்னப்பிரதேசம் அதிர்ந்து மீசை துடித்து!

"லே கோயிஞ்சாமி! என்ன நினைத்துவிட்டாய் எம் கும்பகோண சமூகத்தை! இது மட்டுமில்ல, கும்பகோணம் பூரா நிறைய மளிகைக் கடைல இப்படிதான், புரிஞ்சதா? என்னன்னு நெனச்சீர் கும்பகோணம்னா!!!" என்று பொரிந்து தள்ளினார்.

என்ன இருந்தாலும் கும்பகோணம் இப்படி ஹை-டெக்காக மாறிய செய்தியை கோயிஞ்சாமியால் நம்பவே முடியவில்லை. அன்று காலை செய்தித்தாளில் கூட ஏதோ வெப்டிசைனர் வேளைக்கு ஆட்கள் தேவை என்ற வரிவிளம்பரம் பார்த்திருந்தான். ஏதோ ஜில்பான்ஸ் சம்பளமாக இருக்கும் என்று நினைத்திருக்க இது என்னடாவென்றால் கும்பகோணம் இப்படி மாறியிருக்கிறதே! ஏதேனும் நவம்பர் புரட்சி வெடித்து விட்டதா என்ன இந்த ஊரில்?

"சரிங்க சரி. சும்மா களாய்ச்சேன். ஆனா சென்னை தவிர்த்த வேற ஒரு ஊர் இப்படி வளர்ச்சி அடைஞ்சது சந்தோஷமாதான் இருக்கு. அது சரி, இங்க அப்போ சாஃப்ட்வேர் கம்பனி எல்லாம் சின்னச்சின்னதா நறைய இருக்கும் போலருக்கே? மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப்-னு கும்பகோணமும் சுத்தி பதினெட்டுப் பட்டியையும் கவர் பண்ணியே காலத்தை ஓட்டிடலாம், இல்ல?" என்று நலம் விசாரித்தான்.


ஆனால் கும்பகோணக் குடிமகனாரோ அந்த ஊரில் அப்படியெல்லாம் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியும் இல்லை என்றுதான் சொன்னார்.

"எல்லாம் மெட்ராசுலேர்ந்து போய் வாங்கிண்டு வருவாங்க"

"என்ன, இந்த சாஃப்ட்வேருக்காக சென்னைக்குப் போவாங்களா? சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு!" என்று பாதி வடிவேலு பாணியில் வியந்தான்.

இதுவும் ஒரு மென்பொருள், ஆமாம்

சரி, என்ன விலை கொடுத்து வாங்கி வருவார்கள் என்று கேட்டான் நண்பரிடம். விலையைச் சொன்னதும் கோயிஞ்சாமியால் திறந்த வாய் மூட முடியவில்லை. சென்னையில் இதே மென்பொருள் பாதிவிலை கூட இருக்காது. அதே டேட்டாஷீட் இன்புட் இண்டர்ஃபேஸ், அதே ப்ரிண்ட் பட்டன், அதே ஸ்டாக் மெய்ண்டனன்ஸ் ரிப்போர்ட்.

"ஆமாம், ஏங்க... கும்பகோணத்துலேர்ந்து நெறைய பேர் சென்னைல சாஃப்ட்வேர் ஆஃபீசுக்கு வந்துருக்காங்களே. ஒர்த்தர் கூடவா இங்க கான்வாஸ் பண்ணி மார்க்கெட் புடிக்க முயற்சிக்கலை?" என்று கேட்டான்.

"ம்ம்ம்? ஏன் நீங்கதான் இங்கயே வந்து தங்கி சேவை பண்றது?" என்று நண்பர் ஒரே போடாகப் போட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தார். கோயிஞ்சாமி கேட்ட அடுத்த கேள்வியான "நீங்க பண்ணலையா?" என்ற கேள்வியை முன்னாலேயே எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது.

கோயிஞ்சாமி அசருவதாக இல்லை. அந்த கும்பகோண நண்பருக்கு மென்பொருள் நிரல்கள் எழுதத்தெரியாமல் இல்லை. அவரது பணியகத் தேவைகளுக்கு அவரேதான் மென்பொருள் எழுதுவார். Foxproவில் போதுமான அறிவு இருந்தது. மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மைத் துறையில்தான் தற்போது பணியாற்றி வருகிறார்.

"நம்பாள முடியாதுப்பா. ஒர்த்தன் எவ்வளவு வேலையைதான் பார்க்கறது?" என்று சொல்லி அவரின் இலக்கு வேறு என்றும் விளக்கிவிட்டார்.

கடைசியில் கோயிஞ்சாமிக்குக் குழப்பமே மிஞ்சியது. இன்னும் தமிழகத்தில் எத்தனையெத்தனை ஊர்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்களோ. உண்மையில் யார் ஒரிஜினல் கோயிஞ்சாமி என்பது யார்? தான் மட்டும்தான் கோயிஞ்சாமியா? அல்லது இந்த ஊர்களில் எல்லாம் மென்பொருள் சந்தை இருப்பதை அறியாத உள்ளூர் நிரலாளர்களா? அல்லது சென்னைக்கு வந்து யானை விலை குதிரை விலை தாண்டி தண்ணீர் விலை கொடுத்து மென்பொருள் வாங்கிப்போகும் கும்பகோணத்துக் கடைக்காரர்களா?

3 Comments:

At July 06, 2005 9:37 PM, Anonymous நிஜ கோயிஞ்சாமி நம்பர் 1 said...

இன்னைக்கு (7-6-2005) 'கெட்டி மேளத்திலே' வந்த கோயிஞ்சாமியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... யாருங்கோ அது?!

- நிஜ கோயிஞ்சாமி நம்பர் 1

நம்பர் 1 கொண்டாட்டம்.. ***

இப்போ தெரியுதா நான் யாருன்னு?!

 
At July 06, 2005 10:15 PM, Anonymous Anonymous said...

எப்பவும் உள்ளுர் சரக்குன்னா மட்டம்தாண்ணா.

கோயமுத்துர்ல தயாரிச்ச பனியன், ஜெட்டியை
சிலோன்ல "இந்தியாவிலிருந்து கடத்தியது" என்று
விற்பனை செய்வார்களாம்.

சென்னையில் இருக்குறவன் கும்பகோணத்தில வாங்கின
இலுப்ப சட்டினு சொல்லி மாஞ்சுபோவான்.

பள்ளிப்பிள்ளைகளுக்கு நோட்டு வாங்க கூட
சென்னை போகிற கும்பகோண ஆளுங்க உண்டு.

சென்னையிலிருந்து கொண்டு வந்த மென்பொருள்னு வித்து பாருங்க.
நல்லா விக்கும்.

(வெளிநாட்டு ) கோயிஞ்சாமி

 
At July 07, 2005 10:41 AM, Blogger Alex Pandian said...

கெட்டி மேளத்தில் பாராவின் எண்ட்ரியே கோயின்சாமி என பெண்களால் கிண்டலடிக்கப்பட்டு அவராலேயே வசனம் எழுதப்பட்டுள்ளது நன்று. அவரின் குரல் தான் யாரோ டப்பிங் கொடுத்தது போல உள்ளது. ஆனால் அவர் பேசுவது சரியாவே புரியல - பான் பராக் காரணமா ?

 

Post a Comment

<< Home