Tuesday, June 28, 2005

மெயின் ·ப்ரேம கோயிஞ்சாமி

கடுப்பாகத் தான் இருக்கிறது, மூன்றாம் முறை இதையே எடுத்துப் போட. என்ன செய்வது, இப்போதுதான் கண்ணன் மூலம் பிரச்னை தலைப்பின் நீளத்தில் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அதனால், மீண்டும், ரிப்பீட்டேய்!
------------------
இடது கண்ணில் -3.5, வலது கண்ணில் -4.5 என்று தாராள மனதாக ஏராள எண்களை அந்தக் கண் மருத்துவர் உதிர்த்தபோது அப்பா வாங்கிக் கொடுத்த கோல்ட் ·ப்ரேம் கண்ணாடிதான் கோயிஞ்சாமியின் அடையாளமாகிப்போனது. அப்பா கூட்டிப்போய் சேர்த்துவிட்டதுதான் சுவாமி வாத்சல்யானந்த குருஜி அருளாசி பெற்ற ஐயாறுடையப்பன் இன்ஸ்டிடியூட் ஆ·ப் டெக்னாலஜி (சுருக்கமாக ஐ.ஐ.டியாம்).

மெட்ராஸ் யூனிவர்சிட்டி கீழ் வருகிற காலேஜ். மூளையெல்லாம் செலவு செய்து படிப்பது சரஸ்வதிக்கு செய்யும் அநீதி அல்லவா? அதனால், சமத்தாக மார்க்கெட்டு கெயிடு மட்டும் படித்து மார்க்கு வாங்கினான் கோயிஞ்சாமி. எட்டு செமஸ்டர் எக்கிப்பிடித்ததில் எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி ஆனான்.

ஐயாறுடையப்பன் வெறும் விபூதி மட்டுமே அருள் பாலித்திருந்த நிலையில் தெண்டச்சோற்று எஞ்சினியர் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமி என்று அவனது பெயர் மட்டும் நீண்டுகொண்டே போனது.

அப்பாதான் சொன்னார், "டேய்! ஏதாவது கம்பியூட்டர் கோர்ஸ் படிடா!".

கூடிய சீக்கிரமே அக்கரை ஒன்றும் பச்சையில்லை என்று கோயிஞ்சாமிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜாவா படித்தாலும் பூவாவுக்கே காரண்டி இல்லை என்பதும் யூனிக்ஸ் படித்துவிட்டு அவனவன் ஓனிக்ஸில் வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறான் என்பதும் பயமூட்டின.

அப்பாதான் சொன்னார், "ஏண்டா! அது என்னவோ மெயின் ·ப்ரேமுன்னு புதுசா வந்துருக்குதாமா? விசாரிச்சுப்பாரேண்டா!".

நாளிதழ்களைப் புரட்டியதில் 6X4 செ.மீ. அளவில் பெட்டி பெட்டியாக மெயின் ·ப்ரேம் விளம்பரங்கள். இந்து தொடங்கி தினத்தந்தி முதற்கொண்டு திண்டிவனம் டைம்ஸ் வரை எங்கும் மெயின் ·ப்ரேம், எதிலும் மெயின் ·ப்ரேம். உலகத்திலுள்ள அனைத்து அபூர்வமான பெயர்களிலும் மெயின் ·ப்ரேம் கோச்சிங் சென்டர்கள் இருப்பதாகத் தெரிந்தது. கூடவே, COBOL, JCL, DB2, IMS, CICS, VSAM என்று ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களும் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு, பூச்சிகள் பறந்தன.

அப்பாதான் சொன்னார், "டேய்! அடையார்ல ஒரு அட்ரஸ் தர்றேன். நாளைக்குப் போய் பார்த்து ஒரு மூணு மாசம் கோர்ஸ் சேர்ந்துக்கிடு".

கோயிஞ்சாமி தன் வாழ்க்கையில் ஒரு மெயின் ·ப்ரேமுக்கு (முக்கியக் கட்டம் என்று தமிழில் வழங்கப்படும்) வந்துவிட்டதாக உணர்ந்து விடியற்காலையில் எழுந்து தலைக்குக் குளித்து விபூதி இட்டுக்கொண்டு பக்திபூர்வமாகக் கோச்சிங் சென்டருக்குச் சென்றான். தமிழ்நாடு அரசுக் கூட்டுறவு நியாய விலை விற்பனை அங்காடியை அடுத்து அதே சாயலில் இருந்த அந்தக் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் பெஞ்சு பலகை போட்டு ஒரு ரிசப்ஷனும் அங்கே சட்டைக்குள் ஒளிந்திருந்த ஒரு ஊழியரும் அவனை வரவேற்றனர்.

"உள்ளே தாம்பா கிளாஸ் நடக்குது. அப்பா ஏற்கனவே போன் போட்டு சொல்லிட்டாரு. கம்பியூட்டர் ரூமுக்குப் போ. செருப்பை வெளிய கழட்டி வெச்சுடு".

அப்போதுதான் தொடங்கியிருந்த வகுப்பில் இவனைப் போலவே ஏழெட்டு கோயிஞ்சாமிகள். தியரி கிளாசும் பிராக்டிகல் கிளாசும் மானசீகமான சுவரெழுப்பிப் பிரிக்கப்பட்டிருந்தன. MVS என்று தொடங்கி அந்த ஆள் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, இரண்டொரு நிமிடத்தில் கோயிஞ்சாமியிடம் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட ஒரு கத்தை காகிதங்கள் ஸ்பைரல் பைண்டாகத் தரப்பட்டன.

அப்போதுதான் முதன்முதலில் மெயின் ·ப்ரேம் என்பது உலகத்திலேயே பழம்பெருச்சாளி கம்பியூட்டர் என்று ஒருவாறு புரிந்துகொண்டான் கோயிஞ்சாமி. அதுவாவது புரிந்த சந்தோஷத்தில் பிராக்டிகல் கிளாஸ் போக, அங்கே அனைத்து கம்பியூட்டர்களும் கருப்பு கலர் பேண்டும் பச்சை சட்டையும் அணிந்திருந்தன. மவுஸ் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போனான். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு ஒரு ·பைல் உருவாக்க முயற்சிக்கும்போது மாஸ்டர் வந்து "அது ·பைல் கிடையாது, டேட்டாசெட்" என்றார். "எதோ ஒரு கருமம்" என்று முணங்கிக்கொண்டே ஒரு விசையைத் தட்டியவுடன் சகலமும் நின்றுபோனது. கணித்திரையின் கீழ் இடது ஓரமாக சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதர் போல ஒரு உருவம் தோன்ற, மாஸ்டர், "அது அப்பிடிதாம்பா! கொஞ்சம் ஸ்லோவா தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்" என்றார்.

கொஞ்ச நேரத்தில் இரவாகிவிட மெயின் ·ப்ரேமுடன் கோயிஞ்சாமியின் முதலிரவு தொடங்கியது. மூன்று மாத காலம் உருண்டோடியது.

அப்பாதான் சொன்னார், "டேய்! ஐ.பி.எம்-ல கால் ·பார் பண்ணியிருக்கான் பாத்தியா? நான் உங்க சென்டர் மாஸ்டர் கிட்ட ஏற்கனவே பேசி ஏற்பாடு பண்ணிட்டேன். போயி டாகுமெண்ட்ஸ் எல்லாம் வாங்கிகிட்டு இன்டர்வியூ போயிட்டு வா!".

கோயிஞ்சாமியின் மெயின் ·ப்ரேம் கோர்ஸ் சான்றிதழும் கூடவே ஈ-·பண்ட்ஸ் நிறுவனத்தில் இவன் ஒரு வருடம் மூன்று மாதம் பணிபுரிந்த அனுபவச் சான்றிதழும் தயாராக இருந்தன. கோயிஞ்சாமிக்கு வழக்கம் போலவே ஏதும் புரியவில்லை.

"தம்பீ! இந்தக் காலத்துல் டூப்ளிகேட் அனுபவம் காட்டாம உன்ன மாதிரி பசங்களுக்கு வேலை எங்கே கெடைக்குது சொல்லு? இதுக்காகவேதான் ஈ-·பண்ட்ஸ், டிசிஎஸ், கோவான்ஸிஸ் மாதிரி கம்பெனி லெடர் பேட் ரெடியா வெச்சிருக்கோம். கொஞ்ச நேரம் இரு. ஈ-·பண்ட்ஸ்ல நீ செஞ்ச வேலை என்ன, என்னென்ன கத்துக்கிட்டே, என்னென்ன பிரச்னை வந்தது, எப்பிடி சமாளிச்சே எல்லாம் சொல்லித் தரேன். இன்டர்வியூல இதுதான் கேப்பாங்க" என்றார் மாஸ்டர்.

ஆயிற்று இன்றோடு இரண்டு வருஷம். பெங்களூரில் எங்காவது பாஸ்ட் ·புட் உணவகத்தில் நின்றுகொண்டே இட்லியும் இனிக்கும் சாம்பாரும் விழுங்கி, புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டிருக்கும் ஐ.பி.எம் கோல்டு ·ப்ரேம் கோயிஞ்சாமியைப் பார்த்தால் நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள்.

ரம்மியமான கோயிஞ்சாமி

கோயிஞ்சாமி கிளப் மெம்பராக இருக்கும் ஒரு கோயிஞ்சாமி எழுதிய புத்தகத்தை மற்றொரு கோயிஞ்சாமி படித்துவிட்டு சம்பந்தப்பட்ட கோயிஞ்சாமிக்கு சமர்ப்பிக்குமாறு கடிதமொன்று போட்டுள்ளது. சக கோயிஞ்சாமிகள் படிக்கும் பொருட்டு அக்கடிதத்தின் மின் வடிவம்:

ஆட்டோ ஸ்ட்ரைக்ஆட்டோ ஸ்ட்ரைக்


மஞ்சாக்கலரு சேல,
கன்னங்கரேல் தலமுடி
வூட்டுப் பக்கம் வருவியான்னு
காத்துக்கடக்கேன் நானு.

உன்னுள் கலக்க
துடிக்கிறது ஆவி
பெட்ரோலு ரேட்டு
ஏறிடுச்சே பாவி

ஆபீசு லேட்டு
அப்பீட்டு சீட்டு
பஸ்ஸு வந்தா போதும்
வுட்டுடுவேன் ஜூட்டு

பிர்ஞ்ச்தும்மே-
ஒரே வழிதாங்க்கீது
ஒன்க்கு தேவ பெட்ரோலு
என்க்கு தேவ கோட்டரு

-கோய்ஞ்சாமி

(கோயிஞ்சாமியின் "காதலின்றேல் க்வாட்டர்" கவிதைத் தொகுப்பிலிருந்து... பணியகம் வர தாமதம் ஆகியதற்கு சால்ஜாப்பு சொல்லுகிறான் என்று மெமோ கொடுத்து பாராட்டு கிடைக்கச்செய்த கவிதை)

Monday, June 27, 2005

கிழக்கு பதிப்பகத்துக்கு சிறப்பு கௌரவம்

உயிரினும் இனிய கோயிஞ்சாமிகளே,

ஒரு மகிழ்ச்சியான சேதி. நமது க்ளப்பின் பெருமைக்குரிய இரண்டு மூத்த கோயிஞ்சாமிகள் பங்குபெற்றுள்ள கிழக்கு பதிப்பகம், இவ்வாண்டின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றாக நெய்வேலி புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகிறது.

ஜூலை 3ம்தேதி மாலை கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கிறார்கள். பாராட்டு விழாவில் கலந்துகொள்ள, கோயிஞ்சாமிகள் பத்ரியும் பாராவும் நெய்வேலி செல்கிறார்கள்.

ஜூலை 1 முதல் 10 வரை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆதரவில் நெய்வேலியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தொடர்பான மற்ற விவரங்களை விரைவில் இங்கே அளிக்கிறோம்.

Friday, June 24, 2005

வங்கதேசத்துக்கு முதலைகள்

சென்னை முதலைப் பண்ணையிலிருந்து நாற்பது 'மகர்' சதுப்புநில முதலைகள் வங்கதேசத்துக்கு அனுப்பப்படவுள்ளன. நேற்றே 'பேக்' செய்துவிட்டார்கள்.

இதற்குக் காரணம் வங்கதேசத்திலிருந்த கடைசி மகர் முதலை மண்டையைப் போட்டதே. சென்னை முதலைப் பண்ணையில் கிட்டத்தட்ட 2,000 மகர் இன முதலைகள் உள்ளன.

கோயிஞ்சாமி இந்தச் செய்தியைத் தன் மகளிடம் சொன்னான்.

"அய்யோ, அப்ப இங்க முதலைங்கள்ளாம் இருக்காதா?"

"இல்லைம்மா, நம்மகிட்ட நெறைய இருக்கு. அதனால 40 முதலைங்கள மட்டும் அவங்ககிட்ட கொடுக்கறோம்!"

"அவங்களுக்கு எதுக்கு முதலைங்க வேணும்?"

"ஏன்னா, அவங்ககிட்ட இருந்த முதலை செத்துப்போச்சு"

"ஏன் செத்துப்போச்சு?"

"அவங்க சரியா கவனிக்கலை போல"

"அப்ப இப்ப போற முதலைங்கள சரியா கவனிச்சுப்பாங்களா, இல்லை இதையும் கொன்னுடுவாங்களா?"

ஆஹா! மாட்டிகிட்டோமே என்று முழித்தான் கோயிஞ்சாமி. நம்மூர் முதலைப் பண்ணை ஆசாமிங்க இந்த விஷயத்தைக் கேட்டாங்களா இல்லையான்னு தெரியலையே?

கோயிஞ்சாமியும் எழுத்தும்

கோயிஞ்சாமியின் எழுத்துலக வாழ்க்கை விசித்திரமானது. சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக எழுதியே பெரிய படைப்பாளி ஆனவர் கோயிஞ்சாமி. கோயிஞ்சாமியின் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன திருப்பங்களே தமிழ் இலக்கியத்தின் பெரிய பெரிய மைல் கல்லாக ஆனதை சரித்திரம் பகரும். அப்படிப்பட்ட சம்பவங்களின் தொகுப்பிலிருந்து சில சாம்பிள்கள் மட்டும்.

20 வயசில்....

'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் ஒரு நாவல் எழுதக்கூடாது?'

40 வயசில்....

'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் இன்னொரு நாவல் எழுதக்கூடாது?'

60 வயசில்...

'கோயிஞ்சாமி, கோயிஞ்சாமி... நீ ஏன் நாவல் எழுதறதை நிறுத்தக்கூடாது?'


/கோயிஞ்சாமி நெம்பர் ஒன்/

Thursday, June 23, 2005

மயில் டிசைன் போட்ட ஃப்ளோரசண்ட் நீலச்சட்டை

கோயிஞ்சாமியின் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவனுக்கு ஒரு பரிசு கொண்டுவந்திருந்தார். அழகானதொரு சட்டை. முழுக்கைச் சட்டை. மார்பின் இருபுறங்களிலும் பட்டையாக பார்டர் போட்ட ஃப்ளோரசண்ட் நீல நிறச் சட்டை.

அதுநாள் வரை கவனம் கவராத சட்டைகளை மட்டுமே அணிந்து பழக்கப்பட்ட கோயிஞ்சாமி, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அமைந்த அந்த ஜில்பான்ஸ் சட்டையைப் பார்த்ததும் மிகுந்த பரவசமாகிவிட்டான்.
இன்றைக்கு நாட்டு மக்களை ஒரு வழி பண்ணிவிடுவது என்கிற முடிவுடன் மறுநாள் அந்தச் சட்டையை அணிந்துகொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

"ஐயய்ய்யே!" என்று முதல் பார்வையில் கலவரமூட்டும் விதமாக ரியாக்ட் செய்த அவனது மனைவி, ஓரிரு வினாடிகள் கழித்து, 'நல்லாத்தான் இருக்கு'என்று சொன்னதில் சற்றே தெம்படைந்து, கம்பீரமாகப் புறப்பட்டான்.

வீதியில் இறங்கியதும் ஒரு நாய் அவனை முறைத்தது. அவனது மூலவர் திருமேனிக்கு அந்தச் சட்டையின் கண்ணைப்பறிக்கும் நீலம் சரியான எதிரிடையாக அமைந்திருப்பது எப்படியோ அந்த நாயின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். எப்போதும் பார்த்ததும் மரியாதையாக நகர்ந்து போகும் அந்த ஜந்து, அன்றைக்கு 'உர்ர்..ஹுர்ர்' என்று கொஞ்சம் மிரட்டியது.
கோயிஞ்சாமி சற்றும் மனம் கலங்காமல் அதை திருப்பி முறைத்துவிட்டு (ஆனால் பதிலுக்கு 'உர்ர் ஹுர்ர்' என்று சத்தமெழுப்பவில்லை) வீரமாக நடக்கத் தொடங்கினான்.

"என்ன சார்.. கலக்கறிங்க?" முதல் கணை, அவன் தினமும் சந்திக்கும் தெருமுனைக் கடைக்காரரிடமிருந்து வந்தது.

"சொல்லுங்க நாடார். நல்லாருக்கா?" என்று ஆர்வமுடன் கேட்டான் கோயிஞ்சாமி.

"உம்ம்.. பிரமாதம்.. செண்பகமே செண்பகமே ராமராஜன் திரும்பி வந்த மாதிரி இருக்கு. என்ன நீங்க கொஞ்சம் கலர் கம்மி" என்றார் கடைக்காரர். என்னவோ ராமராஜனைப் பக்கத்தில் நின்று பார்த்தவர் மாதிரி.

கோபம் கொண்ட கோயிஞ்சாமி, ராமராஜன், கருப்பு நிறம்தான் என்பதை எடுத்துச் சொல்லியும் கடைக்காரர் நம்ப மறுத்தார். "அரை டிராயர்ல வரசொல்ல மொழங்கால் கூட சேப்பா இருக்கும் சார்.. என்னா சார் இப்பிடி சொல்றிங்க?" என்றார். ராமராஜனின் முழங்கால் வரை ரசித்தவர் அவர் என்பது தெரியாத கோயிஞ்சாமி சற்றே தயங்கினான். பிறகு அவர் பேச்சு கா விட்டுவிட்டு மேலே நடந்தான்.

பஸ் ஸ்டாண்ட் வரை தினமும் அவனை அழைத்துச் சென்று விடும் ஆட்டோ டிரைவர், "டக்கரா இருக்குது சார்.. எங்க, பர்மாபஜார்ல புட்ச்சிங்களா?" என்று கேட்டார்.

பர்மா பஜாரில் இத்தனை கலாபூர்வமான சட்டைகளெல்லாம் இருக்கிறதா என்ன? அவனது அயல்தேசத்து நண்பர் குறித்தும் அவரது அன்பைக் குறித்தும் அவருக்கு விளக்கினான்.

"இன்னாது? அவுங்க ஊரு தேசிய உடையா? சர்தான்!" என்று டிரைவர் இழுத்த ராகம் கிட்டத்தட்ட குந்தளவராளி போல இருந்தது. "நமக்கு அப்பிடி எதனா கீதா சார்?"

ஏன், வேட்டி சட்டைதான் நமது தேசிய உடை என்று கோயிஞ்சாமி சொன்னான்.

"அது சர்தான்சார். இந்தமாதிரி சொம்மா ஜம்முனு, டக்கரா எதனாச்சும்.. இந்த ராஜிவ்காந்தியெல்லாம் மாட்டிக்குவாங்களே, மாவு மெசினு கொழா மாதிரி ஒரு கோட்டு.. அது நம்ம தேசிய உடைங்களா?"

டிரைவராகப்பட்டவர் தன்னை மட்டுமல்லாமல் தேசத் தலைவர்களையும் ஒருங்கே அவமானப்படுத்துவதாக நினைத்த கோயிஞ்சாமி, மேற்கொண்டு விவாதிக்காமல் அமைதி காத்தான்.

பஸ்ஸில் அவனை ஒரு ஜீவனாக அதுவரை நினைத்துப் பாராதவர்களெல்லாம் அன்றைக்கு திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் நன்றாக இருப்பதாகவும் சொன்னார்கள். கிண்டலாகச் சிரித்தவர்களெல்லாம் பொறாமைக் காரர்கள் என்று அவன் முடிவு செய்தான்.

"ஐயே சன்னலுக்கு போடுற ஸ்கிரீனவா சொக்காதச்சிப் போட்டுக்கிற?" என்றாள் ஒரு வயதானகிழவி. கடவுளே! எந்த ஜன்னல் ஸ்கிரீன் இத்தனை அழகாக இருக்கமுடியும்!

கோயிஞ்சாமிக்கு ஒரு விஷயம் புரிந்தது. சாதகமாகவோ, பாதகமாகவோ - அவனது அந்தச் சட்டை பற்றிப் பேசாமல் யாராலும் இருக்கமுடியவில்லை! பூமியில் அவன் அவதரித்த புண்ணிய தினத்திலிருந்து அந்த்ச் சட்டையை அணிவதற்கு முந்தைய தினம் வரை, ஒரு நாள்கூட யாரும் அவ்னையோ, அவனது ஆடை அலங்காரத்தையோ பொருட்படுத்திப் பேசியதில்லை. ஒரே ஒரு சின்ன மாறுதல்தான் அவன் செய்திருந்தான். கண்ணைப் பறிக்கும் வண்ணம். மேலாக மார்பின் இருபுறமும் பட்டையாக சரிகை பார்டர் போட்டது போல (மயில் பொம்மைகள் நிறைந்த) ஒரு டிசைன். அவ்வளவுதான். ஒட்டுமொத்தத் தமிழகமுமா திரும்பிப் பார்த்துப் பேசும்?
இத்தனை நாள் கோயிஞ்சாமி எழுதிக்கிழித்த எந்த ஒரு கதை/கட்டுரை குறித்தும் கூட யாரும் அத்தனை பேசியதில்லை. ஒரு சட்டை என்ன வித்தை காட்டுகிறது!

அன்று முழுவதும் கோயிஞ்சாமியைப் பார்த்த அத்தனை பேரும் அவனது அந்தச் சட்டை குறித்துப் பேசாமல் இருக்கவில்லை. அருமை என்றார்கள், எருமை என்றார்கள். இப்பத்தாண்டா நீ ஒரு நிஜமான கோயிஞ்சாமி மாதிரி இருக்கே என்று புல்லரித்துப் பேசினார்கள்.

கோயிஞ்சாமி ஒரு முடிவுக்கு வந்தான். கவனம் கவர இதைக்காட்டிலும் உன்னதமான வழி வேறில்லை!

தனது வெளிநாட்டு நண்பருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, பத்து சட்டைகள் அதே போல ஃப்லோரசண்ட் ஆரஞ்சு, ஃப்ளோரசண்ட் மெஜந்தா, ஃப்ளோரசண்ட் பச்சை போன்ற நிறங்களில் எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்க முடிவு செய்தான்.

அன்றிரவு அவன் வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வெக்கை தாங்காமல் குடும்பமே வீதியில் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனைப் பார்த்ததும் அவனது தம்பியின் குழந்தை உரக்க குரலெடுத்துச் சொன்னது: "பெய்ப்பா.. குதுகுதுப்பகாரன்.. பெய்ப்பா குதுகுதுப்பகாரன்"

பெரியவர்கள் மாற்றிச் சொல்லியிருக்கலாம். குழந்தைகள் பொய்சொல்லாது. ஒரு முழுநாள் அந்த அருமையான சட்டையைத் தான் அவமானப்படுத்தியிருக்கிறோம் என்று அப்போது தான் புரிந்தது கோயிஞ்சாமிக்கு.

Friday, June 17, 2005

'ஜோதிடக்குடி தாங்கி' கோயிஞ்சாமி


Image hosted by Photobucket.com


மேஷ ராசி மக்களே!
எப்பா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு சனி பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போயும் ஒளிஞ்சிக்கோங்க!மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. பேசுனா உங்க நாக்குல சனி நாற்காலி போட்டு உட்காந்துக்கும்.
பரிகாரம்: ராமராஜனை உங்க காஸ்ட்யூம் ட்சைனரா நியமிச்சு, அவரு சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி மக்களே!
நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. முக்கியமா நடக்கறப்போ உங்க வலது காலும், இடது காலும் உரசவே கூடாது. அப்படி நடக்காட்டி என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது.

மிதுன ராசி மக்களே!
எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்க செல்லை கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. சனி எட்டாம் பாதத்துலயிருந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தெறிச்சு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோ னா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.
பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி மக்களே!
மெட்டி ஒலிக்கும், கெட்டிமேளத்துக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, 'பச்ச' & 'மஞ்ச' கலரைப் பாக்கக்கூடாதுங்கோ. 'கருப்பு-வெள்ளை' டி.வி. பாக்கலாமான்னு கருமம் புடிச்சாப்ல கேட்காதீக. பாக்கலாம். ஆனா 'ஒப்பாரி' சவுண்டைக் கேட்கக் கூடாது. அரசியல்வாதிகளைப் பாக்கக் கூடாது. ஏன்னா, இவ்வளவு நாள் உங்க வீட்டு டேபிள்ல இருந்த சனி இப்போ உங்க வீட்டு கேபிளுக்கு பெயர்ச்சி ஆயிருக்கு.
பரிகாரம்: உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ!

சிம்ம ராசி மக்களே!
சனியும், ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'google' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. இதுல எதையாவது மீறினா, சனி அனுப்புற வைரஸால உங்க சிஸ்டம் புட்டுக்கும்.
பரிகாரம்: 'ஸ்ரீபில்கேட்ஸ் ஜெயம்'னு டெய்லி நோட்பேட்ல 100kb டைப் பண்ணுறது உத்தமம். (cut copy paste ..ம்ஹூம்!)

கன்னி ராசி மக்களே!
ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி மக்களே!
அந்நியன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ஆத்திரத்துல சனி பாதத்துக்குப் பாதம் 'பங்கி ஜம்ப்' ஆடிக்கிட்டு இருக்கறதால, இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பாக்கக்கூடாது. அஸின் ஆகவே ஆகாது. நீங்க 'ஐஸ்'ஸை நைஸாப் பாத்தா சனியோட கோபம் பல மடங்கு, 'raise' ஆக வாய்ப்பிருக்கு. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!
பரிகாரம்: 'லகலகலகலகலகா'ன்னு சொல்லிட்டே, உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரை டெய்லி பத்து முறை சுத்தணும்.

விருச்சிக ராசி மக்களே!
யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!
பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி மக்களே!
நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. 'நான்'-ஐ இங்கிலீசுல எப்படி சொல்லணும்னு யாராவது கேட்டாக் கூட 'You'னு உளறுவது நல்லது.
பரிகாரம்: 'i'யை எங்கப் பாத்தாலும் தார் பூசி அழிச்சிடுங்க!

மகர ராசி மக்களே!
வாஸ்துப்படி சனி உங்களுக்கு பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.
பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி மக்களே!இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற சனிப் பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூசைக்கூட படிக்கக்கூடாது.
பரிகாரம்: ஏதாவது ஆதிவாசி கிராமத்துக்குப் போயி தலைமறைவா வாழுங்கோ!

மீன ராசி மக்களே!
சனி நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நணங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ புடிச்சு சனிக் கெரகத்துக்கு போயிடுறது நல்லது.
பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

(மேலும் பலன்களை அறிந்துகொள்ள iamnothere@sani.com-க்கு மெயிலுங்க!)

சனிப் பெயர்ச்சி பலன்கள்!!!

கூடிய சீக்கிரத்துல 'சனி' பெயர்ச்சி ஆகப் போகுதாம். அதுக்கு ஏதோ பலன்கள் எல்லாம் உண்டாம். ஆளாளுக்கு 'பலன்களை' சொல்லி விற்பனையைப் பெருக்கி 'பலன்களை' அனுபவிக்கிறாங்க! நம்மோட 'குல தெய்வம்' கூகுள்தான்! அதனால அதுல தேடி ஒவ்வொரு ராசிக்கும், பலன்களை தொகுத்து எனக்கு இமெயில்ல தந்திருக்காரு 'ஜோதிடக்குடிதாங்கி'. அறிய ஆர்வமா இருக்கீங்களா? கொஞ்ச நேரம் பொறுங்க! இதோ வந்துகிட்டே இருக்கு சனி...

வீட்டில் நீங்கள் என்னெல்லாம் செய்கிறீர்கள்?

இப்படியொரு கஷ்டம் இருக்கமுடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை கோயிஞ்சாமி.

கடந்த சில மாதங்களாக கோயிஞ்சாமி ஒரு தொலைக்காட்சித் தொடருக்குக் கதை, வசனம் எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. எந்தப் புதிய பணியை ஒப்புக்கொண்டாலும் ஆர்வமும் அக்கறையுமாக உழைக்கும்
கோயிஞ்சாமியாகப்பட்டவன், இந்தப் பணியையும் அவ்வண்ணமே மேற்கொண்டான்.

ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்னையால், தான் எழுதிக்கொண்டிருந்த 254வது காட்சியின்போது துவண்டுபோய் நேற்றிரவு தரையில் விழுந்தான். அவனது கணினி அநாமதேயமாக இரவெல்லாம் அப்படியே எழுத
ஆளில்லாமல் காத்துக்கிடந்தது என்று பிடிஐ செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

கோயிஞ்சாமியின் பிரச்னைதான் என்ன?

ஒரு தொடர் என்றால் அதில் நான்கு அல்லது ஐந்து வீடுகள், அந்தந்த வீட்டு மனிதர்கள் , அவர்களின் கதைகள் என்று தான் நகரும். காட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். இதற்குப் பல்வேறு
பொருளாதாரக் காரணங்கள் உண்டென்பதை கோயிஞ்சாமி அறிவான்.

ஆனால் வீட்டுக்குள் ஒவ்வொரு காட்சி தொடங்கும்போதும் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

இங்கேதான் கோயிஞ்சாமி மாட்டிக்கொண்டான்.

பத்து முறை சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். இருபது முறை துணி துவைத்துக்கொண்டிருக்கலாம். ஏழெட்டு முறை பேப்பர் படித்துக் கொண்டிருக்கலாம். பிறிதொரு முறை போன் பேசிக்கொண்டிருக்கலாம்.
பெருக்கிக்கொண்டிருக்கலாம், துடைத்துக்கொண்டிருக்கலாம், ஒட்டடை அடிக்கலாம், ஒன்றுக்குப் போகலாம் (ஆனால் காட்ட முடியாது), துணி மடிக்கலாம், சமைக்கலாம், சண்டை போடலாம்.

வேறென்ன செய்யலாம்?

மேற்கண்ட ஒவ்வொரு செயலையும் கோயிஞ்சாமி குறைந்தது இருபது முறை பயன்படுத்தி, எழுதிவிட்டான். புதிது புதிதாக வீட்டில் மக்கள் என்னென்ன செய்வார்கள் என்று தெரியாமல் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத்
தொடங்கினான்.

கோயிஞ்சாமி முதலில் தன் வீட்டில் என்னென்ன காரியங்கள் நடக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினான்.

ம்ஹும். சுவாரசியமானதொரு காட்சி அமைப்புக்கு உகந்ததாக ஏதும் பொதுவில் நடப்பதில்லை என்பதைக் கண்டான். பெரும்பாலும் அவனது மனைவி, குழந்தையுடன்தான் அமர்ந்திருக்கிறாள். அல்லது சமையல். துணி
மடிப்பது. அவ்வளவுதான். எப்போதாவது தன் பிறந்தவீட்டு மனிதர்களோடு தொலைபேசியில். ஆனால் இதெல்லாம் ஒரு காட்சித் தொடக்கமாகாது. சம்பந்தப்பட்ட காட்சியில் என்ன நிகழப்போகிறதோ, அதனுடன்
கொஞ்சமாவது பொருந்தும்படியான தொடக்கம் அவசியம்.


கோயிஞ்சாமியின் அம்மாவின் நடவடிக்கைகளில் சில நல்ல காட்சித் தொடக்கங்கள் இருக்கின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் அவுட் டோர் லொக்கேஷன் எதிர்பார்க்கின்றன. வீதி. எதிர்வீடு.
மொட்டைமாடி. இத்தியாதிகள். சீரியல்களின் முக்கிய நிபந்தனையே, ஹாலைத் தாண்டிக் காட்சி நகரக்கூடாது என்பதுதான் என்பது கோயிஞ்சாமியை மிகவும் பயமுறுத்தியதால், அவனது அம்மாவின் வீதி விசாரணைகள், நீதி விசாரணைகள், மொட்டை மாடி டு மொட்டை மாடி தகவல் பரிமாற்றம் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போனது.

பாவம் கோயிஞ்சாமி என்னதான் செய்வான்?

வீட்டில் நிகழும் விஷயங்களின் முழுப்பட்டியல் ஒன்றை அவனுக்கு யாராவது தந்தால் கோடி புண்ணியம். பெரிய விஷயமாக இருக்க வேண்டியதில்லை. மிகவும் சாதாரண காட்சியாகவே இருந்தால் போதும்.

நேற்று கோயிஞ்சாமி ஒரு காட்சி எழுதினான். வீட்டில் அம்மா, தன் மகனை உட்காரவைத்து நகம் வெட்டிவிட்டபடியே பேசுவதாக.

ஷூட்டிங் நடைபெற்ற இடத்திலிருந்து அவனுக்கு திடீரென்று தயாரிப்பு நிர்வாகி போன் செய்தார்.

"ஏன் கோயிஞ்சாமி! திடீர்னு இந்தமாதிரியெல்லாம் சீன் எழுதி ஏன் எங்க உசிர வாங்கறிங்க?" என்கிற அவரது புலம்பல் முதலில் அவனுக்குப் புரியவில்லை. தயாரிப்பு நிர்வாகி நான்கு அல்லது ஐந்தாவது பத்தியில்தான் விஷயத்துக்கே வந்தார்.

"நீங்கபாட்டுக்கு நகம் வெட்டறமாதிரி எழுதிட்டிங்க. இதெல்லாம் முன்னால சொல்லக்கூடாதா? லைட்டிங்கெல்லாம் முடிச்சிட்டு ஷாட்டுக்குப் போவசொல்ல, எங்கடா நெயில்கட்டர்னு டைரக்டரு கேக்கறாரு.
கிருகம்பாக்கம் வீட்டு லொக்கேஷன்ல நான் நெயில்கட்டருக்கு எங்க போவேன்?"

கோயிஞ்சாமி மயங்கி விழுந்ததன் காரணம் மேற்சொன்னதுதான். ஆகவே அன்பர்களே! கோயிஞ்சாமி தன் சங்கடத்திலிருந்து தப்பிக்கும்விதமாக, செட் ப்ராபர்டி அதிகம் கேட்காத, எளிய வீட்டு சூழல்களைப் பட்டியலாகத்
தந்தால் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் மெகா சீரியல் இல்லாத வாழ்க்கை அமைய இறைவனைப் பிரார்த்திப்பான்.

Thursday, June 16, 2005

முட்டைப் பைத்திய மின்னஞ்சல்

புரோலாக்கு
---------------
"ராம் வீட்டு சேவல் க்ருஷ்ணன் வீட்டில் முட்டைப் போட்டால் அந்த முட்டை யாருக்கு சொந்தம்?"
"சேவல் ராமோடது. அதனால முட்டையும் ராமுக்குதான் சொந்தம். இதுல என்ன சந்தேகம்?"
"போய்யா கோயிந்சாமி. சேவல் போய் எங்கயாவது முட்டை போடுமா?"

நடுலாக்கு
-------------
ஒரு ஊரில் 18 பைத்தியங்கள் வசித்து வந்தன. அவைகளில் அவையுள் தலைமைப் பொறுப்பில் இருந்த பைத்தியம் நோய்வாய்ப்பட்டு இறந்துவடவே, அவைகளுள் அவையுள் யார் தலைவர்ப் பதவி வகிப்பது என்பதில் போட்டாபோட்டி எழுந்தது. அடிதடியில் வளர்ந்து ஒவ்வொரு பைத்தியமும் தான்தான் தலைவனாகத் தகுதியுடையவன் என்று சண்டையிட்டன.

இது பற்றி அறிந்த ஒரு முனிவர் அத்தனை பைத்தியங்களையும் தன் ஆசிரமத்திற்கு வரவழைத்தார். பிறகு தான் ஒரு கேள்வி கேட்கப்போவதாகவும் அதற்கு சரியான பதில் சொல்லும் பைத்தியமே தலைமைப் பைத்தியம் வகிக்கலாம் என்றும் யோசனை சொன்னார். முனிவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக இதர பைத்தியங்களும் ஒத்துக்கொண்டன.

முனிவர் கேட்ட கேள்வி இதுதான்:
"ஒரு தராசின் ஒரு பக்கத்தில் பத்து கிலோ இரும்பும் இன்னொரு பக்கத்தில் பத்து கிலோ பஞ்சும் இருந்தால், இரும்பின் எடை அதிகம் இருக்குமா அல்லது பஞ்சின் எடை அதிகம் இருக்குமா?"

எப்பிலாக்கு
---------------
முனிவரின் கேள்விக்கு சரியான விடை தெரிந்தவர்கள் இங்குள்ள பின்னூட்டம் வழியாகவோ அல்லது goinchaami@gmail.com என்ற முகவரிக்கோ தங்கள் விடையை அனுப்பி வைக்கலாம்.

அத்வானி பாகிஸ்தானி

ஸஞ்சயா, அத்வானி பிரச்னை என்ன என்பதை விளக்கிச் சொல்லக்கூடாதா. எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் இதைப்பற்றித்தானே எழுதுகிறார்கள், ஆனால் எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை என்றான் கோயிஞ்சாமி.

"எதைச் சொல்லணும்? நடந்ததையா? நடக்கப் போறதையா? இல்ல ஏன் நடந்ததுங்கறதையா?"

"எல்லாத்தையுமே, ஆனால் எனக்குப் புரியற மாதிரி"

"ஒரு ராகி மால்ட், ஒரு டீ" என்று ஆர்டர் கொடுத்து பெஞ்சில் அமர்ந்த ஸஞ்சயன், "முதல்ல சில கேள்விகளைக் கேட்பேன், உனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்ன்னு பார்க்கணும்" என்றான்.

"ராகி மால்ட் உனக்கா இல்லை எனக்கா?" என்றான் கோயிஞ்சாமி.

"உனக்கெல்லாம் டீதான். அது கிடக்கட்டும், அத்வானி பத்தி உனக்கு என்ன தெரியும்"

"ஒரு அரசியல் கட்சித் தலைவர். இந்துத்வா கொள்கைக்காரர். ராமர் கோயில் கட்டுவேன்னு தேர் வுட்டார். இப்ப பால் மாறிட்டார் போலட் தெரியுது"

"சரி, சங் பரிவார்னா என்னன்னு தெரியுமா?"

"ஏதோ கொஞ்சம். ராஷ்டிரிய சுவயம் சேவக்னு ஒரு அமைப்பு. காக்கி டிரவுசர், காக்கிச் சட்டை போட்டுகிட்டு, கைல கம்பு வெச்சுகிட்டு உடல் பயிற்சி செய்வாங்க. நாக்பூர்ல தலைமை அலுவலகம். ரொம்ப நாளா, சுதந்தரத்துக்கு முன்னாடிலேர்ந்து இருக்காங்க. நாடு முழுக்க இருக்காங்க.

அப்புறம் விஸ்வ ஹிந்து பரிஷத். இவங்க 1980லதான் வெளில தெரிஞ்சாங்க. இவங்களோட கொள்கைகள் என்னன்னு சரியா தெரியல. ஆனா முஸ்லிம்கள்கிட்ட வம்புக்கு போறது முக்கியமான கொள்கையா வச்சிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. அயோத்தில ராமர் கோயில், த்வாரகால கிருஷ்ணர் கோயில், காசில சிவன் கோயில் எல்லாம் கட்டணும்னு ஆசைப்படறாங்க. ஆனா அங்கெல்லாம் இருக்கற மசூதிகள இடிச்சுட்டு அங்கத்தான் கோயில் கட்டணும்னு பாக்கறாங்க. அதத் தவிர இந்தியா முழுக்க லட்சக்கணக்கான மசூதிகள தகர்த்துட்டு அங்கெல்லாம் கோயில் கட்டணும்னு நினைக்கறாங்க"

"அவ்வளவுதானா?"

"அப்புறம் நம்மூர்ல இந்து முன்னணின்னு ஒரு க்ரூப். அவங்களும் விஸ்வ ஹிந்து பரிஷத்-தானா, இல்லை அவங்களோட தொடர்புடைய ஒரு கூட்டமான்னு தெரியல."

"சரி, பஜ்ரங் தள்னு கேள்விப்பட்டிருக்கயா"

"ம்.. படிச்சுருக்கேன். வானர சேனைன்னு அர்த்தமாம். கைல திரிசூலத்தை வச்சிகிட்டு வம்புக்குன்னே அலையறவங்க மாதிரி தோணுது"

"சரி, இந்த மாதிரி சில அமைப்புகள், அதோட பாரதீய ஜனதா கட்சி, அந்தக் கட்சியோட மாணவர் பிரிவு - அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், தொழில் சங்க அமைப்பு, இன்னம் சில கல்வி அறக்கட்டளைகள், ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பொருளாதாரச் சிந்தனைகள் திங்க் டாங்க் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் - இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து சங் பரிவார்னு சொல்றது. எல்லாமே ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் அப்படிங்கற சங்கத்தின் கருத்துக்கள் அடிப்படைல உருவானதால சங்கக் குடும்பம்னு பொருள்."

"சரி. இதுக்கும் அத்வானி பிரச்னைக்கும் என்ன தொடர்பு?"

"இவங்கள்ளாம் சங்-கோட பிள்ளைகள் இல்லையா? இந்த சங் சில அடிப்படைக் கொள்கைகளை வச்சிருக்கு. அதுல ஒண்ணு பிரியாத இந்தியாவை மீண்டும் - ஒரு காலத்துல - திரும்பி உருவாக்கணும்ங்கறது. அதுக்க அகண்ட பாரத் - அதாவது பெரும்-பாரதம்னு ஒரு பேர் வச்சிருக்காங்க. அதுல புராண இதிஹாசங்கள் நடந்த இடமெல்லாம் ஒண்ணா சேர்ந்ததுதான் அகண்ட பாரதம்."

"அடடா, ஸஞ்சயா, அப்ப மேட்டரு ஒன் ஒலகத்தப் பத்தினதுதான். ஆமா இந்த மஹாபாரதப் போர் நடந்ததே அதெல்லாம் நீ கூட ரன்னிங் கமெண்டரி கொடுத்தயே, அந்த சமயத்துல எந்தெந்த இடமெல்லாம் உங்காளுங்க இருந்தாங்க?"

"இப்ப இருக்கற ஆஃப்கானிஸ்தான்ல பல பகுதிகள், பாகிஸ்தான் நிச்சயமா உண்டு. கொஞ்சம் முன்னாள் சோவியத் யூனியன்ல இருந்த, இப்ப மத்திய ஆசிய நாடுகள் என்கிற சில இடங்கள். இப்படி பல இடங்களும் உண்டு."

"சரி, இதெல்லாம் நடக்கற காரியமா? இந்த அகண்ட பாரதத்துல சீனா எதுவும் இல்லையே? இல்ல, ஏன்னா நாம போய் அகண்ட பாரதத்தை கொடுன்னு அவங்கிட்ட கேக்கப் போக, வீண் சண்டையாகிடக் கூடாதே"

"இந்த அகண்ட பாரதத்த பலரும் விரும்பினாங்க. ஆஃப்கானிஸ்தான் போனாக்கூட பரவால்ல, ஆனா பாகிஸ்தான் பிரியக்கூடாதுன்னு ஹிந்து மஹாசபா, ஆர்.எஸ்.எஸ் போன்ற குழுக்கள் சுதந்தரம் சமயத்துல சண்டை போட்டாங்க. அதோட தொடர்ச்சியாத்தான் மஹாத்மா காந்திதான் இந்தியா பிரியக் காரணம்னு நாதுராம் கோட்சேங்கற ஒரு ஹிந்து மஹாசபா ஆள், ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கருக்கு நெருங்கி அறிமுகமானவன் காந்திய சுட்டுட்டான்."

"ஓ, அப்படியா! நான்கூட கமலஹாசன்தான் காந்திய சுடப்பாத்தாருன்னு ஏதோ ஒரு படத்துல பாத்தேனே... பேரு கூட மறந்துடுச்சு. ஏதோ சாமி பேரு கூட அந்தப் படத்துல வரும்!"

"ஹே ராம்! இந்த கோயிஞ்சாமியைக் காப்பாத்து! மூதேவி! நான் ஒனக்கு சீரியஸா வரலாறு பாடம் நடத்தறேன், நீ சினிமா சினிமான்னு மெட்ராஸ் சாக்கடைல விழறியே!"

"ஆஹா கரெக்டு. மெட்ராஸ் சாக்கடைலதான் கமல் கூட... அட! ஆமா! ஹே ராம்!"

பெருமூச்சு விட்ட ஸஞ்சயன் "ரெண்டு வாழப்பழம் நாயரே" என்றான்.

கோயிஞ்சாமி மீண்டும் ஸஞ்சயன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும், ஸஞ்சயன் தொடர்ந்தான்.

"மொதல்ல அகண்ட பாரதம் கிடைக்கலேன்ன ஒடனே காந்தியை போட்டுத்தள்ளியாச்சு. அடுத்து பெரிய வில்லன் மொஹம்மத் அலி ஜின்னா. இந்தாளு இல்லன்னா பாகிஸ்தான் பிரிஞ்சு போயிருக்காது இல்லையா? அதுனால அந்தாளு ஒரு ராஸ்கோலு அப்பிடின்னு சங் பரிவாரிகள் முடிவு கட்டினாங்க. பாகிஸ்தான் அப்பிடிங்கற நாட்டு மேலயே ஒரே காண்டு. இந்த வெறுப்பு சாதாரண வெறுப்பு இல்ல. எப்படி பாகிஸ்தான்ல ஸ்கூல் புத்தகங்கள்ள இந்தியா மேல வெஷம் தூவினாங்களோ அதே மாதிரி ஆர்.எஸ்.எஸ் ஷாகால கையக் காலத் தூக்கி டான்ஸ் ஆடறப்போ பாகிஸ்தான் ஒழிகன்னு கத்திகிட்டே செய்வானுங்க போல இருக்கு."

"சரி, அதுக்கும் அத்வானிக்கும் என்ன சம்பந்தம்?"

"அத்வானி பாரதீய ஜனதா தலைவர். ஆனா ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்னு பெருமையோட சொல்லிகிறேன்னவரு. அந்த சங்கத்துல என்னன்னா சங்கத்தோட தலைவர்தான் சுப்ரீம். அவரு என்ன உளறினாலும் எல்லாரும் கை தட்டனும். எதுத்து கேக்கக் கூடாது. அந்த தலைவர் சாகற வரைக்கும் அவர்தான் தலைவர். எதுத்தா நீ வெளில போலாம். அவ்வளவுதான். பயங்கர பிற்போக்குக் கொள்கை. பொம்மனாட்டிங்கல்லாம் சமையல் ரூமுக்குள்ளாற இருக்கணும். சமைக்கணும், சோறு போடணும், புள்ளை பெத்துக்கணும். அது மட்டும் செய்யணும் அப்பிடின்னு சொல்றவங்க. மொத்தத்துல கூறு கெட்ட மூதேவின்னு வச்சிக்கயேன். ஆனா அந்தாளு சொன்னா எல்லா உறுப்பினனும் கேக்கணும். இப்ப நம்ம துணை ஜனாதிபதி இருக்காருல்ல பைரோன் சிங் ஷேகாவத். அவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். ஆனா ஆர்.எஸ்.எஸ் தலைவரு சுதர்சன் யோவ் பைரோன், வந்து நடு ரோட்டுல மூச்சா போ அப்பிடின்னா உடனே வந்து செய்யணும்!"

"அடப்பாவிகளா!"

"ஆமா. ஆனா அத்வானி என்ன செஞ்சிட்டாரு, பாகிஸ்தான் போய் ரெண்டு மூணு தப்புக்காரியம் பண்ணிட்டாரு - ஆர்.எஸ்.எஸ் பார்வைல"

"அதென்ன?"

"மொத மொத பாகிஸ்தான் அப்பிடிங்கற நாடு இருக்கறதை ஒருவகைல அங்கீகரிச்சுட்டாரு. அதனால் அகண்ட பாரதம் அவுட்டு! அப்புறம் ஜின்னா பாகிஸ்தான் எப்படி இருக்கணும்னு 11 ஆகஸ்ட் 1947ல பேசின பேச்சு பிரமாதமா இருந்துச்சு. சூப்பர் அப்பு அப்புடின்னுட்டாரு. இது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எகிறிடுச்சு! அத்தோட விட்டாரா, அயோத்யா மசூதி இடிப்பு துக்ககரமான நாள் அப்புடின்னு பாகிஸ்தான் மக்கள்ட்ட மன்னிப்பு கேட்டாரு. இது விஸ்வ இந்து பரிஷதுக்கு ரொம்பவே டென்ஷன ஏத்திவிட்டுடுச்சு."

"ஆக, சங் பரிவாரத்தின் அடிமடில கைய வச்சுட்டாரு!"

"கரெக்டு. பாத்தானுங்க இவனுங்க. அத்வானி பதவி விலக வேண்டும்னு போஸ்டர் அடிச்சுட்டானுக."

"இவரு பேசாம போடா ஜாட்டான்னு சொல்லிருக்கலாமே"

"சொல்லலாம். ஆனா ஒரு அரசியல் வெளயாட்டு வெள்ளாடிப் பாக்கலாமேன்னு நினைச்சாரு. நமக்கு என்னா சப்போர்ட் இருக்கு பார்ட்டிக்குள்ளாறன்னும் ஒரு கை பாக்கணுமில்லையா? அப்புறம் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி தொல்லை வேற ஜாஸ்தியாயிகிட்டிருக்கு. அவனுங்க இல்லாம நாம பொழைக்க முடியுமான்னு டெஸ்ட் பண்ணனும். இந்த பாஜகல நெறைய தலைவருங்க ஆர்.எஸ்.எஸ் காரனுங்க. வாய்ல நொரை தள்ள பேசற முரளி மனோஹர் ஜோஷி மாதிரி ஆளுங்க. உடனே அவனுங்க எதிர்கொரலு வுட்டாங்க"

"அப்புறம் என்னாச்சு"

"அத்வானி ராஜினாமா எழுதி கொடுத்து, என் மேல நம்பிக்கையிருந்தா என்னை லீடரா வச்சுக்கங்க, இல்லாட்டி போங்கடான்னாரு"

"அப்புறம்?"

"ஒரு மாதிரி செட்டில் பண்ணிருக்காங்க இப்ப. அத்வானி தொடர்ந்து பாஜக தலைவரா இருப்பாரு. ஆனா ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி ரெண்டுபேருமே ரொம்ப தொல்லை பண்ணுவானுங்க. ஏன்னா பாஜகல எங்க பாத்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரா இல்லாட்டியும் அவங்க கொள்கைல வளர்ந்தவங்க"

"அப்ப பாஜக அவுட்டா?"

"இப்பவே பாஜக கொஞ்சம் அடிவாங்கித்தான் இருக்கு. மே 2004 எலெக்ஷனுக்கு அப்புறம் தளர்வுதான். அத்வானி தான் மண்டையப் போடறதுக்குள்ள கொஞ்சம் கட்சியை மாத்திடலாம்னு யோசிக்கிறார்னு படுது. இந்தப் பிரச்னையே இப்பத்தானே ஆரம்பமாகுது? இனிதான் பாக்கணும் எப்படி இன்னமும் அதிகமாவுதுன்னு."

"வாஜ்பாய் அத்வானி பக்கம் போலத்தெரியுது?"

"ஆமா. அவருக்கு கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கும். எல்லாரும் சேர்ந்து அத்வானியை டிஃபெண்ட் பண்ணனும்னு சொல்லியிருக்காரு"

கோயிஞ்சாமியால் இதுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்பதால் எழுந்து பக்கத்தில் இருந்த குட்டிச்சுவரை நோக்கி சிறுநீர் கழிக்கச் சென்றான்.

Monday, June 13, 2005

நுழைவுத் தேர்வு பிரச்னை

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்சய

-*-

ஸஞ்சயா, இந்த நுழைவுத் தேர்வு பிரச்னை என்ன ஆகும், எங்கு போய் முடியும் என்று உன் ஞானதிருஷ்டியால் கண்டுணர்ந்து சொல்லக் கூடாதா என்றான் கோயிஞ்சாமி.

"ரெண்டு கிளாஸ் சூடா டீ போடுங்க நாயர்" என்று ஆர்டர் கொடுத்தபடி டீக்கடை வாசல் பெஞ்சில் அமர்ந்திருந்த ஸஞ்சயன் தொண்டையைக் கனைத்து சரி செய்துகொண்டான்.

"எதுக்கெடுத்தாலும் கோர்ட்டுக்குப் போறது இப்ப வழக்கமாப் போயிடுச்சு. ஆனா கவர்மெண்டு இப்படி நுழைவுத்தேர்வை வச்சிட்டு அதைத் திடீர்னு கேன்சல் செஞ்சா தப்பு, அதனால பல மாணவர்கள் மோசமான முறைல பாதிக்கப்பட்டிருக்காங்கன்னுதான் கோர்ட்டு தீர்ப்பு சொல்லும்னு என்னோட ஞானதிருஷ்டில தெரியுது."

"அடப்பாவமே! அப்ப இந்த வருஷம் அட்மிஷன் முடிய மாசக்கணக்காகுமோ?"

"ஆமா! வெறும் அரசியல் காரணங்களுக்காக இப்படி இஷ்டத்துக்கு முடிவெடுத்தா நாட்டு மக்கள் எல்லோருக்கும்தான் கஷ்டம்!"

"சரி, நுழைவுத் தேர்வு வேணுமா? இல்லை ஒழிச்சுடலாமா?"

"எக்கச்சக்கமா நுழைவுத்தேர்வுகள் இருக்கறது சரியில்லை. அமெரிக்கா மாதிரி ஒரு GRE, ஒரு SAT. அதுல என்ன ஸ்கோர் வருதோ அதை வச்சி எல்லா காலேஜ்லயும் சேரலாம். ஒவ்வொரு காலேஜும் இந்த ஸ்கோரையும், வேற சில க்ரைட்டீரியாவையும் வெச்சுகிட்டு அட்மிஷனை கவனிக்கலாம்."

"ஆமா, நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா இந்தத்தேர்வை யார் நடத்துறது?"

"ஏதோ ஒரு இண்டிபெண்டண்ட் இன்ஸ்டிடூஷன். அது ஏ.ஐ.சி.டி.ஈ + ஏ.ஐ.ஐ.எம்.எஸ் + யு.ஜி.சி சேர்ந்து கூடச் செய்யலாம்."

"நடக்குமா?"

"ம்ஹ்ம்ம்ம். இப்பொழுதைக்கு இல்லை. இன்னமும் பத்து வருஷம் ஆகும்னு ஞானதிருஷ்டில தெரியுது!"

நாவல் பற்றிய குறிப்புகள்

க்ளப் மெம்பர்களில் சிலர் கலைமகள் நாவல் போட்டிக்கு எழுத ஆர்வம் கொண்டு எழுதி வருகிறார்கள். அவர்களுக்கு நாவல் எழுதுவது தொடர்பான இந்தக் குறிப்புகள் ஒருவேளை உதவலாம். இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் பலர் அளித்த குறிப்புகள். என் கைச்சரக்கு எதுவும் இல்லை.

1. சுட்டிக்காட்டப் புதிதாக ஒரு வாழ்க்கை உன்வசம் இருந்தாலொழிய நாவல் எழுத எண்ணாதே. நாவல் என்பது கதை அல்ல.

2. அத்தியாயம் என்றல்ல; அடுத்த வரியைக் கூடத் திட்டமிடாதே. தன்னைத்தானே வழிநடத்திப்போகும் படைப்புதான் காலத்தில் நிலைக்கும். அப்படித் தானாகப் பொங்கி வராத ஒன்றை இழுத்துப் பறித்துவந்து தாளில் இறக்க நினைக்காதிருப்பது நல்லது.

3. ஒரு நாவலில் எத்தனை கோணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை பார்வைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை நூறு பாத்திரங்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆதாரப் பிரச்னை, அதன் மீதான வினாக்கள் சிதறி திசைமாறாமல் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

4. ஒரு நாவலை உயிர்ப்புடன் வைத்திருப்பது, அதில் எழுப்பப்படும் கேள்விகளே. வலுவான கேள்விகளை எழுப்பிக்கொண்டு, அவற்றுக்கான விடைகளைத் தேடுவதே நாவலாசிரியனின் பயணம் என்பதாகும். விடை கிடைத்தாக வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆனால் விடைகளை நோக்கிய யோக்கியமான பயணம் முக்கியம்.

5. நாவலில் ஒரு காட்சியில் வரும் பாத்திரம் கூட ஒழுங்காக சித்திரிக்கப்படவேண்டுமென்பது முக்கியம். பாத்திரச் சித்திரிப்பு என்பது பாத்திர வருணனை அல்ல.

6. ஆறு அத்தியாயங்களுக்கு ஒருமுறையேனும் உரையாடல்கள் சற்று அதிகம் வருவது போன்ற அத்தியாயம் ஒன்று அமைவது நல்லது. சிறுகதையின் முழு இறுக்கம் இதில் தேவையில்லை.

7. இயல்பான வாழ்வின் நகைச்சுவை அம்சங்களை கவனித்துப் பதிவு செய்யத் தவறக்கூடாது. நகைச்சுவைக்குக் கிடைக்கும் எந்த ஒரு சாத்தியத்தை இழந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

8. ஒரே மூச்சில் உட்கார்ந்து எழுதி முடிப்பது சிறிய நாவல்களுக்குச் சரி. பெரிய படைப்பென்றால் அம்முறை வேண்டாம். ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விடாமல் எழுதுவதென்பது நல்லது. குறிப்பிட்ட நேரம் தவிர, குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட மேசை, குறிப்பிட்ட பேனா போன்றவையும் ந஡வலின் தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகளே.

9. விட்டு விட்டு எழுதும்போது மொழி மாறிவிடும் அபாயம் உள்ளது. இதற்கான உபாயம், ஒவ்வொரு முறை எழுதத்தொடங்கும்போதும் முந்தைய அத்தியாயத்திலிருந்து தொடங்கி மீண்டும் எழுதுவதேயாகும். இதன்மூலம் ஒவ்வொரு அத்தியாயத்துக்குமே இரண்டு versions கிடைத்துவிடும் சாத்தியம் உள்ளது. எழுதி முடித்ததும் இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

10. முக்கியமான அத்தியாயங்களைக் குறைந்தது ஐந்து விதமாகவாவது எழுதவேண்டும். நன்றாக வந்துவிட்டதாகத் தோன்றினாலும் மீண்டும் மீண்டும் எழுதவும். இறுதிப்பிரதி தயாரிக்கும்போது சரியான பிரதி எது என்று தானாக நமக்கே தோன்றிவிடும். ருஷ்டி தன் நாவலின் இறுதி அத்தியாயம் ஒன்றை இருபது விதமாக எழுதி வைத்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

11. எழுத ஆரம்பிக்குமுன் மகத்தான நாவல்கள் இரண்டையாவது மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது. அந்நாவல் ஏன் மகத்தானதாக நமக்குத் தோன்றுகிறது என்பதற்கான காரணத்தைப் பிடித்துவிட்டால் போதும்.

12. எத்தனை புத்திசாலித்தனமாக எழுதினாலும் ஆதார மனித உணர்ச்சிகளைப் புறக்கணிக்கும் படைப்பு காலத்தின்முன் நிற்காது. உணர்வுத்தளத்தில் உறவு கொள்ளக்கூடிய படைப்பே நிலைத்து நிற்கும். முற்றிலும் அறிவுத்தளத்தில் இயங்கும் படைப்பு, வெளியாகும் காலத்தில் பேசப்படலாமேயொழிய நம் காலத்துக்குப் பின் நில்லாது.

13. பெண் பாத்திரங்களைச் செயல்களின் மூலமும், ஆண் பாத்திரங்களைப் பேச்சின்மூலமும்தான் இதுவரை வந்த சிறந்த நாவல்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இது ஏன் என்பதை யோசி.

14. நாவல் எழுதும்போது நடுவில் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதாதே. இலக்கியக்கூட்டங்களுக்குப் போகாதே. இலக்கிய விவாதங்களில் ஈடுபட஡தே. மௌனம் பழகு. அளவோடு உண்டு, நேரத்துக்கு உறங்கு. மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவும். அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் பத்து நிமிடம் அமைதியாக உட்கார். அல்லது வாக்கிங் போ. செய்தித்தாள், தொலைக்காட்சி படிக்காதே/ பார்க்காதே.

15. எழுதி முடித்தால் உனக்கே உனக்கு அளித்துக்கொள்ள நீயே ஒரு பரிசைத் தேர்ந்தெடு. அதை வாங்கி மேசையின்மீது வைத்துவிடு. ஆனால் தொடாதே. எழுதி முடித்தால் மட்டுமே எடுத்துப்பார்.

/கோயிஞ்சாமிசீனியர்/

தத்துவம் நெம்பர் 287

உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது