Friday, July 29, 2005

ஊத்திக்கினு கடிப்பதும், கடிச்சுக்கினு ஊத்திப்பதும்

கோயிஞ்சாமிக்கு ஒரு ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த ப்ராஜக்ட் ஒரு இணையதள கட்டுமானத்துக்கானது. அந்த ப்ராஜக்ட்டில் பயனருக்குக் காண்பிக்க ஒரு நாட்காட்டி தேவைப்பட்டது.

அந்த காலண்டரை ஜாவாஸ்க்ரிப்டில் எழுத கோயிஞ்சாமி சபதம் பூண்டான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிடும் விபரீதம் அப்பொழுது கோயிஞ்சாமிக்குக் கிஞ்சித்தும் தெரிந்து இருக்கவில்லை.

காலண்டர் ப்ரோக்ராம் ஒன்று எழுத ஆரம்பிக்கும் முன், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் code/scriptகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்திருந்தான். மறு நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்ப்... சரி சரி. பில்ட்-அப் போதும். மேட்டருக்குப் போவோம்.

ஒரு காலண்டரில் என்னென்ன மாதங்கள் இருக்கிறது என்று தெரியவேண்டும். சுலபம், ஒன்று முதல் பன்னிரண்டு வரை உள்ள எண்கள். அடுத்ததாக ஒரு மாதத்தில் என்னென தேதிகள் உள்ளன என்று தெரியவேண்டும், சில மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும், சில மாதம் 29, சிலவற்றில் 30, 31 இப்படி.

ஆக, அந்த மாதத்தில் எத்தனைத் தேதிகள் உள்ளன என்று கண்டுபிடித்து விட்டால் மற்றவை சுலபம். அதாவது கடைசித் தேதியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஜாவாஸ்க்ரிப்டில் ஒரு மாதத்தின் கடைசித்தேதியைக் கண்டுபிடிக்க உள்ளமைந்த ஃபங்க்ஷன் எதுவும் இல்லை என்பது கோயிஞ்சாமிக்கு உறைக்கவில்லை. எனவே நோட்பேட் திறந்து எழுத ஆரம்பித்தான். மறு நாள் முழுவதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிடும் விபரீதம் அப்பொழுத்... சரி, சரி, சரி. சஸ்பென்ஸ் கதை எழுத ஆசைப்பட்டதில் இருந்து இப்படித்தான் சம்பந்தமில்லாத இடத்தில் பஞ்ச் லைன் வந்து விழுந்துத் தொலைக்கிறது.

எனவே ஒரு மாதத்தின் கடைசி தேதியைக் கண்டுபிடிக்க கீழ்க்காணும் உத்தியைப் பின்பற்றினான்.


ஊத்திக்கினு கடிச்சுக்கறான்
----------------------

இருக்கும் தேதியுடன் ஒரு மாதம் கூட்டினால் அடுத்த மாதம் வந்து விடும். அடுத்த மாதம் வந்தவுடன் அந்த மாதத்தின் ஒன்றாம் தேதிக்கு தேதியை மாற்ற வேண்டும். பிறகு அதில் இருந்து ஒரு தேதி கழித்துவிட்டால், தற்போதைய மாதத்தின் கடைசித்தேதி கிடைத்து விடும்.

உ.தா.:

இன்றைய தேதி: 29 ஜூலை 2005
ஒரு மாதம் கூட்டினால்: 29 ஆகஸ்ட் 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 ஆகஸ்ட் 2005
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 31 ஜூலை 2005

ஆக, ஜூலை மாதத்தின் கடைசி நாள் 31.

ஆஹா, ப்ரமாதம் ப்ரமாதம் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு அந்தந்த கிழமைகளில் சரியாக வருமாறு காலண்டரை உருவாக்கி வீட்டிற்கும் போய்விட்டான் பணியகத்தில் இருந்து.

கடிச்சுக்கினு ஊத்திக்கறான்
-----------------------
மறுநாள் பணியகம் வந்ததும் தான் நேற்று எழுதிய நிரலை ஒரு மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தான். அடடே, என்ன அதிசயம்! நேற்று மிகவும் துள்ளியமாக இயங்கிய நிரல் இன்று தப்புத்தப்பாக காட்டுகிறதே தேதிகளை!

கணிப்பொறியில் தேதியைப் பார்த்தான். 31 மார்ச் 2005 என்று காண்பித்தது (வேண்டுமென்றே மாற்றி அமைத்திருந்தான் கோயிஞ்சாமி).

ஒன்றும் பிடிபடவில்லை. பணியகத்தில் இருந்த ஃப்ரிட்ஜில் இருந்து மூன்று பாட்டில் தண்ணீரை மதியத்திற்குள் காலி செய்தும் பலனில்லை. மதியம் உணவு முடிந்ததும் நெல்லைப் பழரசம் குடித்துவிட்டு வந்தும் ஒரு பலனும் இல்லை.

பிறகு மாலை தேநீர் அருந்தியவுடன் 'பொறுத்தது போதும்!' என்று வலைப்பூக்களை மேய்ந்தான். குழுக்களில் வந்த மடல்களைப் படித்துப் பார்த்தான்.

சரி, இதை விடுவதில்லை என்ற தீர்மானத்துடன் மீண்டும் நோட்பேடை எடுத்து அந்த ஸ்க்ரிப்ட்டை ஆராய்ந்தான்.

என்னதான் நடக்கிறது என்று வரிவரியாக டீ-பக் போட்டு மீண்டும் ஆராய்ந்ததில்....

ஒரு உண்மை புலப்பட்டது.

இன்றைய தேதி: 31 மார்ச் 2005
ஒரு மாதம் கூட்டினால்: 1 மே 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 மே 2005
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 30 ஏப்ரல் 2005

ஆக, மார்ச் மாதத்தின் கடைசி நாள் 30

:-(( :-(( :-((

ஆஹா.... இதான் மேட்டர்.

மார்ச் முப்பத்தொன்றுடன் ஒரு மாதம் கூட்டினால் சாதாரணமாக 31 ஏப்ரல் என்று வரும். ஆனால் புத்திசாலி ஜாவாஸ்க்ரிப்ட், ஏப்ரல் மாதத்தில் 30 தேதி வரைதான் என்று உணர்ந்து, மிச்சமிருக்கும் ஒரு நாளையும் கூட்டி விடுகிறது. எனவே, மே மாதம் ஒன்னாம் தேதி (மேஜர் ஆனேனே!)

இந்த ப்ரச்சனை தீரவேண்டுமென்றால், "இன்றைய தேதி" என்னவாக இருந்தாலும், அதை ஒன்றாம் தேதியாக மாற்ற வேண்டும். அடுத்த மாதம் சென்றவுடன் ஒன்றாம் தேதியாக மாற்றக்கூடாது. இப்படி எழுதினால் எல்லாம் ஓக்கே.

இன்றைய தேதி: 31 மார்ச் 2005
இம்மாதத்தின் முதல் தேதி: 1 மார்ச் 2005 (மொதல்ல கட்ச்கபா)
ஒரு மாதம் கூட்டினால்: 1 ஏப்ரல் 2005 (இப்ப ஊத்திக்கபா)
இதிலிருந்து ஒரு நாள் கழித்தால்: 31 மார்ச் 2005

கோயிஞ்சாமி நிம்மதியாக நோட்பேடை மூடிவைத்தான். இந்த நாள் முழுதையும் இந்த ஜாவாஸ்க்ரிப்ட் காலண்டர் சாப்பிட்டுவிட்ட விபரீதம் இப்பொழுது கோயிஞ்சாமிக்குக் நன்றாகத் தெரிந்தது.

ஆனால் ஊத்திக்னு கடிச்சுக்கலாம், கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம் என்ற தத்துவம் எப்பொழுதும் எல்லா இடத்திலும் சரிவராது என்பதை கோயிஞ்சாமி உணர்ந்து கொண்டான்.

Tuesday, July 12, 2005

கோயிஞ்சாமியும் அரசியலும்

கோயிஞ்சாமி மிகவும் பெருமிதமடைந்தும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். தி ஹிந்து நாளிதழைப் புரட்டிப்பார்க்கும் போது அப்படியொரு செய்தி அவனது கண்ணில் பட்டது. தலைப்புச் செய்தியாக வந்த அந்த வரியை எப்படியோ எழுத்துக்கூட்டிப் படித்து முடித்ததும் கொயிஞ்சாமிக்குத் தலைகால் புரியவில்லை.

வந்திருந்த செய்தி இதுதான்:

RSS delivers stern message to BJP

கோயிஞ்சாமி பொதுவாகவே விஷயஞானம் அதிகம் உள்ளவனாதலால் பி.ஜே.பி என்பது ஒரு இந்திய அரசியல் கட்சி என்பதை மிகவும் சுலபமாகக் கண்டுபிடித்து விட்டான். இந்த அரசியல் கட்சி வலைப்பதிவுகளைப் படிப்பது வருவதும் அந்த வரியில் இருந்து கோயிஞ்சாமிக்குப் புரிந்தது.

தலைப்புச் செய்தியைப் படித்ததுமே புரிந்து விட்டது, ஏதோ ஒரு வலைப்பதிவாளர் ஒரு கடினமான கோரிக்கையை முன்வைத்து வலைப்பதிவு எழுதி இருக்கிறார் என்று. அதாவது நாட்டு மக்கள் இடும் வலைப்பதிவுகளை எல்லாம் ஒரு இந்தியக் கட்சி படித்துவருகிறது. அப்படிப் படிக்க ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் ரீடரைப் பயன்படுத்துகிறது. ஒரு இந்தியக்குடிமகனின் வலைப்பதிவுக்கான RSS ஒரு கடினமான வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

என்ன ஒரு கட்சி பி.ஜே.பி! இப்படி கட்சிக்குள் தகவல்தொடர்புத் துறை ஒன்று அமைத்து நாட்டுமக்களின் வலைப்பதிவுகளைக் கூட படித்து வருகிறதே. ஆஹா, இந்தியா என்றால் இந்தியாதான். எந்த நாட்டில் உள்ளது இது போன்ற ஒரு மக்களை மதிக்கும் பண்பாடு.

ஒரு வேளை எதிர்க்கட்சியின் வலைப்பதிவில் வந்த RSS Feedஆக இருக்குமோ? சரி, எப்படியோ. நாட்டிலுள்ள கட்சிகளெல்லாம் கொள்கை பரப்ப வலைத்தளம் மட்டும் இல்லாமல் பிறர் கருத்துக்களை மதிக்க வலைப்புக்களையும் படித்து வருகின்றன. அதுமட்டும் மகிழ்ச்சி.

காங்கிரசின் ஆட்டப் பிரச்சனை, பி.ஜே.பியின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சனை, எல்லாம் நாட்டிற்கும் பிரச்சனையாக இருக்கிறதே என்று கவலைப்படும் அதே வேளையில், Atom மற்றும் RSS தொழில்நுட்பங்களுக்கு மனதார நன்றியும் சொல்லிக்கொண்டான் கோயிஞ்சாமி.

Wednesday, July 06, 2005

கும்பகோணத்தில் கோயிஞ்சாமி

'சனி நீராடு' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது சேர்ந்தார்ப்போல் வரும் சனி ஞாயிறு விடுமுறையில் ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்வாயாக! தண்ணீர்ப்பஞ்ச சென்னையிலிருந்து விடுபட்டு சனி நீராடுவாயாக என்று சொன்னது இதையே குறிக்கும்.

அப்படியான சனி ஒன்றில் நீராடும் பொருட்டு கோயிஞ்சாமி3 சென்னையை விட்டு கும்பகோணத்தின் அருகில் இருக்கும் திருவலஞ்சுழிக்குச் சென்றான். அங்கே இப்போது என்ன விசேஷம் என்பது வேறு விஷயம். திருவலஞ்சுழிக்கோயிலில் களப்பணி நேரம் கோயிஞ்சாமி தூங்கிக்கொண்டு காககி குருவிகளை எண்ணிக்கொண்டு இருந்தது வெத்தான விஷயம். ஆனால் மதியம் உணவு நேரம் கோயிஞ்சாமி சென்ற உணவகமே சத்தான விஷயம்.

பணியகத்தை நினைவு படுத்தும் (தூக்கம்தான்) உணவை முடித்துவிட்டு, காலாற நண்பர்களுடன் சாலையில் நடந்துகொண்டிருந்தான் கோயிஞ்சாமி. எதேச்சையாக ஒரு மளிகைக்கடையைப் பார்த்ததும் கோயிஞ்சாமியே சிரிக்கும் ஒரு காட்சி கண்ணில் பட்டது. மளிகைக் கடையில் கம்ப்யூட்டர் வைத்து பில்! பக்கத்தில் இருந்த கும்பகோணத்து நண்பரிடம் சொல்லியே விட்டான் கோயிஞ்சாமி.

"ஹா ஹா. கும்பகோணத்துல இப்படி ஒரு ஹை-டெக் மளிகைக்கடையா? சபாஷ், சபாஷ்"

இந்த கமெண்ட்டைக் கேட்டதும் கும்பகோண தேசப்பற்று மிக்க நண்பருக்கு மூளையில் பூகம்பம் வந்ததால் கன்னப்பிரதேசம் அதிர்ந்து மீசை துடித்து!

"லே கோயிஞ்சாமி! என்ன நினைத்துவிட்டாய் எம் கும்பகோண சமூகத்தை! இது மட்டுமில்ல, கும்பகோணம் பூரா நிறைய மளிகைக் கடைல இப்படிதான், புரிஞ்சதா? என்னன்னு நெனச்சீர் கும்பகோணம்னா!!!" என்று பொரிந்து தள்ளினார்.

என்ன இருந்தாலும் கும்பகோணம் இப்படி ஹை-டெக்காக மாறிய செய்தியை கோயிஞ்சாமியால் நம்பவே முடியவில்லை. அன்று காலை செய்தித்தாளில் கூட ஏதோ வெப்டிசைனர் வேளைக்கு ஆட்கள் தேவை என்ற வரிவிளம்பரம் பார்த்திருந்தான். ஏதோ ஜில்பான்ஸ் சம்பளமாக இருக்கும் என்று நினைத்திருக்க இது என்னடாவென்றால் கும்பகோணம் இப்படி மாறியிருக்கிறதே! ஏதேனும் நவம்பர் புரட்சி வெடித்து விட்டதா என்ன இந்த ஊரில்?

"சரிங்க சரி. சும்மா களாய்ச்சேன். ஆனா சென்னை தவிர்த்த வேற ஒரு ஊர் இப்படி வளர்ச்சி அடைஞ்சது சந்தோஷமாதான் இருக்கு. அது சரி, இங்க அப்போ சாஃப்ட்வேர் கம்பனி எல்லாம் சின்னச்சின்னதா நறைய இருக்கும் போலருக்கே? மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப்-னு கும்பகோணமும் சுத்தி பதினெட்டுப் பட்டியையும் கவர் பண்ணியே காலத்தை ஓட்டிடலாம், இல்ல?" என்று நலம் விசாரித்தான்.


ஆனால் கும்பகோணக் குடிமகனாரோ அந்த ஊரில் அப்படியெல்லாம் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியும் இல்லை என்றுதான் சொன்னார்.

"எல்லாம் மெட்ராசுலேர்ந்து போய் வாங்கிண்டு வருவாங்க"

"என்ன, இந்த சாஃப்ட்வேருக்காக சென்னைக்குப் போவாங்களா? சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு!" என்று பாதி வடிவேலு பாணியில் வியந்தான்.

இதுவும் ஒரு மென்பொருள், ஆமாம்

சரி, என்ன விலை கொடுத்து வாங்கி வருவார்கள் என்று கேட்டான் நண்பரிடம். விலையைச் சொன்னதும் கோயிஞ்சாமியால் திறந்த வாய் மூட முடியவில்லை. சென்னையில் இதே மென்பொருள் பாதிவிலை கூட இருக்காது. அதே டேட்டாஷீட் இன்புட் இண்டர்ஃபேஸ், அதே ப்ரிண்ட் பட்டன், அதே ஸ்டாக் மெய்ண்டனன்ஸ் ரிப்போர்ட்.

"ஆமாம், ஏங்க... கும்பகோணத்துலேர்ந்து நெறைய பேர் சென்னைல சாஃப்ட்வேர் ஆஃபீசுக்கு வந்துருக்காங்களே. ஒர்த்தர் கூடவா இங்க கான்வாஸ் பண்ணி மார்க்கெட் புடிக்க முயற்சிக்கலை?" என்று கேட்டான்.

"ம்ம்ம்? ஏன் நீங்கதான் இங்கயே வந்து தங்கி சேவை பண்றது?" என்று நண்பர் ஒரே போடாகப் போட்டு எஸ்கேப் ஆகப்பார்த்தார். கோயிஞ்சாமி கேட்ட அடுத்த கேள்வியான "நீங்க பண்ணலையா?" என்ற கேள்வியை முன்னாலேயே எதிர்பார்த்திருப்பார் போலிருக்கிறது.

கோயிஞ்சாமி அசருவதாக இல்லை. அந்த கும்பகோண நண்பருக்கு மென்பொருள் நிரல்கள் எழுதத்தெரியாமல் இல்லை. அவரது பணியகத் தேவைகளுக்கு அவரேதான் மென்பொருள் எழுதுவார். Foxproவில் போதுமான அறிவு இருந்தது. மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மைத் துறையில்தான் தற்போது பணியாற்றி வருகிறார்.

"நம்பாள முடியாதுப்பா. ஒர்த்தன் எவ்வளவு வேலையைதான் பார்க்கறது?" என்று சொல்லி அவரின் இலக்கு வேறு என்றும் விளக்கிவிட்டார்.

கடைசியில் கோயிஞ்சாமிக்குக் குழப்பமே மிஞ்சியது. இன்னும் தமிழகத்தில் எத்தனையெத்தனை ஊர்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்களோ. உண்மையில் யார் ஒரிஜினல் கோயிஞ்சாமி என்பது யார்? தான் மட்டும்தான் கோயிஞ்சாமியா? அல்லது இந்த ஊர்களில் எல்லாம் மென்பொருள் சந்தை இருப்பதை அறியாத உள்ளூர் நிரலாளர்களா? அல்லது சென்னைக்கு வந்து யானை விலை குதிரை விலை தாண்டி தண்ணீர் விலை கொடுத்து மென்பொருள் வாங்கிப்போகும் கும்பகோணத்துக் கடைக்காரர்களா?